நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்பமனு விநியோகம்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. இடம் பெறுவது உறுதியாகி இருக்கிறது. இந்தக் கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு கூடுதலாக ஒரு மாநிலங்களவை தொகுதியும் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தே.மு.தி.க. வையும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஸ் கோயல் நேரடியாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால், தே.மு.தி.க.வோ பா.ம.க.வை விட தங்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தது. பா.ம.க.வுக்கு வட மாவட்டங்களில் மட்டும் தான் வாக்கு வங்கி இருப்பதாகவும், தங்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக வாக்கு வங்கி உள்ளதாகவும் தே.மு.தி.க. கூறியது. அதுமட்டுமல்லாமல், பா.ம.க.வுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தங்களுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தது.
இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பா.ஜ.க., பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது போக மீதம் 27 தொகுதிகளே உள்ளன. மேலும், கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்ளிட்ட சில கட்சிகளும் ‘சீட்’ கேட்பதால், தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆனால், தே.மு.தி.க.வோ 9 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறது.
எனவே, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா?, இடம்பெறாதா? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், நேற்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான பிரேமலதா, எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, இளங்கோவன், மோகன்ராஜ் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில் தேமுதிக தலைமை கழகம் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட நாளை மறுநாள் முதல் விருப்ப மனு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.விருப்ப மனு கட்டணம் : பொதுத் தொகுதிக்கு ரூ.20,000, தனி தொகுதிக்கு ரூ.10,000
மார்ச் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அந்த கட்சி சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.