போருக்கு தயாராகும் பாக்.,ராணுவம்
புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா எந்த நேரத்திலும் பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தின் காரணமாக பாக்., ராணுவம் போருக்காக தங்களை தயார்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம், பலோசிஸ்தான் நிர்வாகம் மற்றும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள கடிதம் பாக்., போருக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்தி உள்ளது. பாக்., ராணுவ தலைமையகம் சார்பில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எந்த நேரமும் போர் துவங்கும் சூழல் உள்ளதால் தேவையான மருத்துவ உதவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக 25 சதவீதம் படுக்கை வசதிகள் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அரசு, உள்ளூர் நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே வசிப்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். குடிமக்கள் யாரும் எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே தேவையில்லாமல் செல்ல அனுமதிக்கக்கூடாது. கால்நடைகளை எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம். எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே வசிப்பவர்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் விளக்குகளை எரியவிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியா பதிலடி கொடுக்கும் என்ற அச்சம் காரணமாக பிப்.,17 ம் தேதியே எல்லை பகுதியை ஒட்டிய பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் வேறு இடங்களுக்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்திய படைகள் தாக்குதல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் பதுங்கிடங்களை பாக்., மாற்றி உள்ளது. இந்தியாவுடன் பாக்., போருக்கு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் எந்த அழுத்தத்திற்கும் அடிபணிந்து விடக் கூடாது என பாக்., அரசை ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.