ஹபீஸ் சயீத்தின் பயங்கரவாத அமைப்புக்கு பாக்., தடை
மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் மும்பையில் பல இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 18 போலீசார் உட்பட 166 பேர் பலியானார்கள். இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீது தலைமையிலான ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பு.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. பாக்., மீது நடவடிக்கை எடுக்கும்படி, உலக நாடுகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதனையடுத்து, பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நிர்ப்பந்தம் அளித்து வருகின்றன.
இந்நிலையில் பாக்., பிரதமர் இம்ரான் கான் தலைமையில், தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீதுவின் ஜமாத்- உத்-தவா அமைப்புக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் அந்த அமைப்பின் அறக்கட்டளையான பலாஹ்-இ- இன்சானியாத் பவுண்டேசனுக்கும் பாக்., அரசு தடை விதித்தது. இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.