Breaking News
பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபிநந்தனின் பெற்றோருடன் விமானப்படை அதிகாரிகள் சந்திப்பு

அபிநந்தனின் பெற்றோரை விமானப்படை அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.

அபிநந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபிநந்தனுக்கு ஒரு சகோதரி உள்ளார். அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தகவல் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் பரவியதால் மாடம்பாக்கம் பகுதியே சோகத்தில் மூழ்கியது.

அவரது உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானவர்கள் அங்கு வரத்தொடங்கினர். முக்கியமானவர்களை தவிர பொதுமக்கள், செய்தியாளர்கள் என யாரையும் அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை.

அபிநந்தனின் பெற்றோரை சந்திக்க வந்த அவரது உறவினர் குந்தநாதன் கூறியதாவது:-

வரதமான் என்னுடைய மாமா. அவரது மகன் தான் அபிநந்தன். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், திருப்பணாமுர். தற்போது மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். அபிநந்தனுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.

அபிநந்தன் குடும்பத்துடன் டெல்லியில் தான் வசித்து வந்தார். அவரை மத்திய அரசு பத்திரமாக மீட்டு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையையே மற்ற உறவினர்களும் வலியுறுத்தினர்.

பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா ஆகியோர் அபிநந்தன் பெற்றோரை சந்தித்து பேசினர். மேலும் இந்திய விமானப்படை அதிகாரிகள் அபிநந்தன் வீட்டிற்கு வந்து அவரது பெற்றோரை சந்தித்து விட்டு சென்றனர். மேலும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனும் அவர்களை சந்தித்தார்.

அபிநந்தனின் பெற்றோர் டெல்லி புறப்பட்டு செல்வார்கள் என கூறப்படுகிறது. இந்தநிலையில் அபிநந்தன் பெற்றோர் வசிக்கும் குடியிருப்பில் கதவுகள் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.