பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; சர்வதேச எல்லை பகுதியில் பள்ளி கூடங்கள் மூடப்பட்டன
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை 6 மணியளவில் சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் சிறு பீரங்கிகளை கொண்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்திய தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டது. ஒரு மணிநேர துப்பாக்கி சண்டைக்கு பின் இரு தரப்பிலும் சண்டை நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 5 பேர் காயமடைந்தனர். இதேவேளையில், ஜம்முவின் மாவட்ட மாஜிஸ்திரேட் ரமேஷ் குமார், தாக்குதலை தொடர்ந்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி கூடங்களை மூடும்படி உத்தரவிட்டார்.
இதனை அடுத்து ஜம்முவை சுற்றி 5 கி.மீட்டர் தொலைவிலுள்ள அனைத்து பள்ளி கூடங்களும் இன்று மூடப்பட்டு உள்ளன. இதேபோன்று சம்பா மாவட்டத்திலும் பள்ளி கூடங்கள் மூடப்பட்டு உள்ளன.