எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு ஆகாது : இம்ரான்கான் பேச்சு
பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பிரதமர் இம்ரான்கான் குறுக்கிட்டார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டவாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
சமாதானத்துக்கான நமது விருப்பத்தில், நல்லெண்ண அடிப்படையில் நம்மிடம் காவலில் உள்ள இந்திய விமானப்படை அதிகாரி நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார் என்று அறிவிக்கிறேன். இது அமைதி பேச்சுவார்த்தைக்கான முதல் படி ஆகும்.
எந்த பிரச்சினைக்கும் போர் தீர்வு அல்ல. எனவே இந்திய தலைமை பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.
அதே நேரத்தில், பதற்றம் வேண்டாம் என்னும் பாகிஸ்தானின் விருப்பத்தை பலவீனம் என தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
நமது ஆயுதப்படைகள் கடுமையாக போரிடக்கூடியவை. எந்த ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் பதில் அளிக்க அவர்கள் தயாராக உள்ளன.
பாகிஸ்தான் சமாதானத்தை விரும்புகிற நாடு ஆகும். இந்த பிராந்தியத்தில் அமைதி தவழ வேண்டும். ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். இதுதான் பாகிஸ்தானின் விருப்பம்.
பதற்றம், பாகிஸ்தானின் நலன்களுக்கானது அல்ல, இந்தியாவின் நலன்களுக்கானதும் அல்ல. எனவேதான் நேற்று (நேற்றுமுன்தினம்) இந்திய பிரதமருடன் தொலைபேசியில் பேசுவதற்கு நான் முயற்சித்தேன்.
பிராந்தியத்தில் சமாதானமும், ஸ்திரத்தன்மையும் நிலவுவதற்கு பதற்றத்தை தணிப்பதில் சர்வதேச சமூகம் பங்களிப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.