Breaking News
“டோனி களத்தில் இருந்தால் பயம் ஓடி விடும்” – கேதர் ஜாதவ் ருசிகர பேட்டி

ஐதராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதன் பிறகு விக்கெட் கீப்பர் டோனியும் (59 ரன், 6 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவும் (81 ரன், 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) சூப்பராக பேட்டிங் செய்து 10 பந்து மீதம் வைத்து வெற்றியை உறுதி செய்தனர். முக்கியமான ஒரு விக்கெட்டை வீழ்த்தி அரைசதமும் விளாசிய கேதர் ஜாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.மராட்டியத்தை சேர்ந்த 33 வயதான கேதர் ஜாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

டோனியுடன் இணைந்து பேட்டிங் செய்வதை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணருகிறேன். அவருடைய விளையாட்டினை டி.வி.யில் பார்த்து வளர்ந்தவன் நான். தற்போது அவருடன் சேர்ந்து போட்டியில் வெற்றி பெற வைக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. எனது கனவு நனவானதில் இதை விட பெரிது என்ன இருக்கப்போகிறது. இதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணருகிறேன்.

நான் ஏற்கனவே கூறியது போல், டோனி என்ன சொன்னாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவேன். மற்றபடி எல்லாம் வெற்றிகரமாக அமையும். அவரிடம் இருந்து ஒவ்வொரு முறையும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். அவருடன் இணைந்து ஆடும் போது, ‘நீங்கள் களத்தில் இருக்கும் போது நான் எதை பற்றியும் பயப்படமாட்டேன்’ என்று அவரிடம் சொல்வேன்.

இன்றைய ஆட்டத்திலும் இலக்கை எட்ட முடியுமா? என்று துளியும் கவலைப்படவில்லை. டோனி எதிர்முனையில் நிற்கும் போது, அவரைப் பார்த்தாலே நிறைய நம்பிக்கை வந்து விடும். இதே போல், ‘நீங்கள் உடன் இருந்தால் தானாகவே எல்லாம் சரியாக நடக்கும்’ என்று அவரிடம் சொல்வது உண்டு.

போட்டிகளின் போது நான் பலமுறை காயமடைந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் அணி நிர்வாகம் என்னை ஊக்கப்படுத்திக்கொண்டே இருந்தது. காயம் குணமடைந்து உடல் தகுதியை எட்டும் போதெல்லாம் அணியில் இடம் கிடைக்கிறது. கடினமான காலக்கட்டத்தில் எனக்கு ஆதரவாக இருந்த கேப்டனுக்கும், அணி நிர்வாகத்தும் நன்றி கடன் பட்டுள்ளேன். என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் பிரதிபலன் செய்ய வேண்டிய நேரம் இதுவாகும்.

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து நான் பேட்டிங்கில் 6-வது வரிசையில் விளையாடி வருகிறேன். அப்போதில் இருந்தே என்னை வெற்றிகரமாக ஆட்டத்தை முடிப்பவராகத் தான் பார்க்கிறார்கள். பேட்டிங்கில் நீங்கள் 6-வது வரிசையில் தான் இறக்கப்படுவீர்கள் என்று அணி நிர்வாகம் முன்பே கூறி விட்டது. அது மட்டுமின்றி அணியில் ஒவ்வொரு வீரர்களின் பங்களிப்பு என்ன என்பதையும் அணி நிர்வாகம் தெளிவுப்படுத்தி இருக்கிறது. அதனால் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறது என்பது எல்லா வீரர்களுக்கும் தெரியும். இவ்வாறு ஜாதவ் கூறினார்.

முக்கியமான கட்டத்தில் விக்கெட் வீழ்த்தி எதிரணியின் ஜோடியை பிரித்து விடுகிறீர்கள். உங்களால் எப்படி இதை செய்ய முடிகிறது, வெற்றியின் ரகசியம் என்ன என்று ஜாதவிடம் கேட்ட போது, ‘அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். என்னை பொறுத்துவரை எப்போதும் ஸ்டம்பை தாக்கும் வகையில் குறி வைத்தே பந்து வீசுகிறேன். எனது பந்து வீச்சில் பந்து அதிகமாக எழும்பாது. இதே போல் 2-3 கோணத்தில் பந்து வரும். அதை கணித்து ஆடுவது கடினம்’ என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இப்போதைக்கு நான் என்னை முழு நேர பந்து வீச்சாளராக நினைக்கவில்லை. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப, அணிக்கு தேவைப்பட்டால் நிச்சயம் 10 ஓவர்களும் பவுலிங் செய்வேன். ஆனால் தொடர்ச்சியாக பந்து வீசுவதற்கு என்னை மனரீதியாக தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும். ஏனெனில் இளம் வயதில் நான் அதிகமாக பந்து வீசியதில்லை. இதே போல் ஒவ்வொரு ஆட்டத்திலும் 10 ஓவர்கள் வீசுவதற்கு உடல்தகுதியும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.