Breaking News
ராணுவ ஆஸ்பத்திரியில் 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை: விரைவில் பணிக்கு திரும்ப விரும்பும் விமானி அபிநந்தன்

புலவாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில் இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 26-ந் தேதி பாகிஸ்தானுக்கு போய் பயங்கரவாத முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு அழித்தன.

இதற்கு பழிவாங்கும் விதமாக மறுநாளில் (27-ந் தேதி) பாகிஸ்தானின் ‘எப்-16’ ரக அதிநவீன போர் விமானங்கள் காஷ்மீரில் புகுந்தன. ஆனால் இந்திய விமானப்படையினர் ‘மிக்-21’ ரக போர் விமானங்களில் சென்று அவற்றை விரட்டியடித்தனர். ஒரு விமானத்தை இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இதன்மூலம் ‘எப்-16’ ரக விமானம் ஒன்றை, வான்மோதலில் முதன்முதலாக வீழ்த்திய இந்திய விமானப்படை விமானி என்ற பெயரை அவர் தட்டிச்செல்கிறார்.

இந்த நடவடிக்கையின்போது இந்திய போர் விமானம் ஒன்று, பாகிஸ்தான் தாக்குதலுக்கு ஆளாகி, அதில் இருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் படையிடம் சிக்கினார். 3 நாட்களுக்கு பின்னர் அபிநந்தன் வெள்ளிக்கிழமை (1-ந் தேதி) இரவு விடுதலை செய்யப்பட்டு, இந்தியாவிடம் வாகா எல்லையில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அபிநந்தன் உடனடியாக டெல்லிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டார். அந்த விமானம் இரவு 11.45 மணிக்கு டெல்லி சென்றடைந்தது. அவருக்கு விமானப்படை மத்திய மருத்துவமனையில் முதல் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்தன.

அதைத் தொடர்ந்து அவர் ராணுவத்தின் ஆர்.ஆர். மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்துச் செல்லப்பட்டு சோதனைகள் நடந்தன. குறிப்பாக பாகிஸ்தான் பிடியில் அவர் இருந்தபோது, உடலில் ஊசி மருந்து செலுத்தப்பட்டுள்ளதா, உளவு பார்க்கும் நோக்கத்தில் அவரது உடலில் ‘சிப்’ ஏதாவது பொருத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியில் அவரை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், விமானப்படை தளபதி தனோவா ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். அவரது துணிச்சலையும், மன உறுதியையும் கண்டு, நாடு பெருமைப்படுவதாக நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

இருவரிடமும் தான் பாகிஸ்தான் பிடியில் இருந்தபோது மன ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அபிநந்தன் தெரிவித்தார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், 2-வது நாளாக ராணுவ மருத்துவமனையில் அவருக்கு நேற்றும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

அதற்கு மத்தியில் பல்வேறு பாதுகாப்பு முகமைகளை சேர்ந்த அதிகாரிகள், அபிநந்தனை சந்தித்து பாகிஸ்தான் பிடியில் அவர் சிக்கியது தொடங்கி, விடுதலையாகி வந்தது வரையில் நடந்த நிகழ்வுகள் குறித்து கேள்விகள் கேட்டு பதில்களை பெற்றனர்.

அடுத்த 2 நாட்களுக்கு இந்த விசாரணை தொடரும் என தகவல்கள் கூறுகின்றன.

இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் அபிநந்தன், நல்ல மன நிலையிலும், உற்சாகத்திலும் உள்ளார், விரைவில் அவர் பணிக்கு திரும்ப விரும்புகிறார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.