ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: வெற்றியை தொடரும் முனைப்பில் இந்தியா – 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
இந்த தொடரை தித்திப்புடன் தொடங்கியதால் உற்சாகமடைந்துள்ள இந்திய வீரர்கள் வெற்றியை நீட்டிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஆனால் தொடக்க ஆட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டதையும் மறுக்க முடியாது. பந்து வீச்சில் சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் காட்டிய சிக்கனமே ஆஸ்திரேலியாவை 236 ரன்களில் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் வழக்கமாக மிரட்டும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 60 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
பேட்டிங்கை எடுத்துக் கொண்டால் இந்திய அணி ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. அதன் பிறகு கேதர் ஜாதவும், டோனியும் அரை சதம் அடித்ததோடு 5-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். தடுமாற்றத்துடன் ஆடிய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கணிசமான ரன்கள் எடுத்தால் தான், வலுவான ஸ்கோரை எட்ட முடியும். உலக கோப்பை போட்டிக்கு ஆயத்தமாவதற்கு இந்த தொடரைத் தான் தேர்வாளர்கள் மையப்புள்ளியாக வைத்திருக் கிறார்கள். அதனால் ஒவ்வொரு வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இந்த தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றினால், ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் படுதோல்வி அடைந்ததன் மூலம் தரவரிசையில் 2 புள்ளியை இழந்த இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மயிரிழையில் இந்திய அணி பின்தங்கி 123 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. எனவே வெற்றிகளை குவிக்கும் போது இந்தியா மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு சென்று விடலாம்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பதிலடி கொடுக்கும் முனைப்புடன் வியூகங்களை வகுத்துள்ளது. அந்த அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். அணியுடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள மூத்த வீரர் ஷான் மார்ஷ் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளார். இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் முதலாவது ஒரு நாள் போட்டியில் அவர் 0, 8, 0 என்று சொதப்பி இருக்கிறார். பார்ம் இன்றி தவிக்கும் அவர் கடந்த 8 ஒரு நாள் போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பழைய நிலைக்கு திரும்பாவிட்டால், அவரே சில ஆட்டங்களில் ஒதுங்க வேண்டிய நிலை கூட ஏற்படலாம்.
போட்டி நடக்கும் நாக்பூர் மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமானது ஆகும். அதனால் ரசிகர்கள் ரன்வேட்டையை எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் போக போக ஆடுகளத்தன்மையில் வேகம் குறையலாம். நேற்று முன்தினம் நாக்பூரில் மழை பெய்தது. ஆனால் இன்றைய தினம் மழை வாய்ப்பில்லை, வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மைதானத்தில் இந்திய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (மூன்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) 2-ல் தோல்வியும் (இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. இங்கு 6 முறை 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 354 ரன்கள் குவித்தது, இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), அம்பத்தி ராயுடு, டோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: உஸ்மான் கவாஜா, ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஷான் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், கிளைன் மேக்ஸ்வெல், அலெக்ஸ் காரி, நாதன் கவுல்டர்-நிலே, பேட் கம்மின்ஸ், ஜாசன் பெரேன்டோர்ப், ஆடம் ஜம்பா.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
‘அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்காததற்கு நான் காரணம் அல்ல’ – குல்தீப்
கை மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி சுழற்பந்து வீசும் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹலின் வருகைக்கு பிறகு, இந்திய ஒரு நாள் போட்டி அணியில் இருந்து முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஓரங்கட்டப்பட்டார். 2017-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு அவர் ஒரு நாள் போட்டியில் விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு மட்டுமே சேர்க்கப்படுகிறார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவுக்கும் இதே நிலைமை தான் காணப்பட்டது. ஆனாலும் அவருக்கு அவ்வப்போது ஒரு நாள் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியையொட்டி நேற்று பேட்டி அளித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் 24 வயதான குல்தீப் யாதவிடம் இந்த விஷயங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘எங்களது (குல்தீப்-சாஹல்) சிறப்பான செயல்பட்டால் தான் ஒரு நாள் போட்டி அணியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அணியில் இருந்து யாரையும் நாங்கள் வெளியேற்றவில்லை. கிடைத்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டோம் அவ்வளவு தான். அஸ்வினும், ஜடேஜாவும் எப்போதும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளனர். இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது பங்களிப்பை அவர்கள் அளித்து வருகிறார்கள். அனுபவம் வாய்ந்த அவர்களிடம் இருந்து நாங்கள் நிறைய கற்று இருக்கிறோம். நானும், யுஸ்வேந்திர சாஹலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நன்றாக பந்து வீசி, அணியின் வெற்றிக்கு உதவுகிறோம். அதில் தான் எங்களுக்கு மகிழ்ச்சியே’ என்றார்.