டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலியை நெருங்கினார், வில்லியம்சன்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆனால் அவரது முதலிடத்திற்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வங்காளதேசத்துக்கு எதிராக ஹாமில்டனில் நடந்த முதலாவது டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 18 புள்ளிகள் கூடுதலாக பெற்று மொத்தம் 915 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடருகிறார். இதன் மூலம் ஐ.சி.சி. தரவரிசை வரலாற்றில் அதிக புள்ளிகளை குவித்த நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை வில்லியம்சன் பெற்று இருக்கிறார். நியூசிலாந்து தரப்பில் 900 புள்ளிகளை கடந்த மற்றொரு வீரரான ரிச்சர்ட் ஹாட்லீ, பந்து வீச்சாளர் தரவரிசையில் 909 புள்ளிகள் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது. அதை வில்லியம்சன் முறியடித்துள்ளார்.
வில்லியம்சன் தற்போது விராட்கோலியை விட 7 புள்ளி மட்டுமே பின்தங்கி இருக்கிறார். இந்திய அணிக்கு இப்போதைக்கு டெஸ்ட் போட்டிகள் இல்லை. ஆனால் நியூசிலாந்து அணி வங்காளதேசத்திற்கு எதிராக இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதனால் வில்லியம்சன், கோலியை முந்துவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. வில்லியம்சன் ஏற்கனவே 2015-ம் ஆண்டில் சில வாரங்கள் ‘நம்பர் ஒன்’ ஆக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது. ஹாமில்டன் டெஸ்டில் 126, 74 ரன்கள் வீதம் எடுத்த வங்காளதேச தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 11 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர் புஜாரா 881 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-5 இடத்தில் முறையே கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ரபடா, பிலாண்டர் (இருவரும் தென்ஆப்பிரிக்கா), ரவீந்திர ஜடேஜா (இந்தியா) ஆகியோர் மாற்றமின்றி தொடருகிறார்கள். டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் முதலிடமும், வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் 2-வது இடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடமும் வகிக்கிறார்கள்.