தேர்தல் பிரச்சாரத்துக்கு கெஜ்ரிவாலை அழைக்க கமல் திட்டம்
மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அழைக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி இந்த வாரம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை முடித்து பிரச்சாரத்தை தொடங்க உள்ளன.
அதிமுக கூட்டணி சார்பாக சென்னை அடுத்த வண்டலூரில் நாளை நடக்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 13-ம் தேதி தமிழகம் வர உள்ளார். அவரை தொடர்ந்து, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்களும் தமிழகம் வர உள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அழைக்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அக்கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள பல்வேறு வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. மக்கள் நீதி மய்யத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வருமாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அழைக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தொடக்க விழாவில் கேஜ்ரிவால் ஆர்வமுடன் பங்கேற்றார். எனவே, தேர்தல் பிரச்சாரத்துக்கும் வருவார் என்று நம்புகிறோம். இதேபோல, பல்வேறு பிரபலங்களையும் பிரச்சாரத்தில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றனர்