துரைமுருகனின் பேச்சால் தேமுதிகவின் திருஷ்டி கழிந்துவிட்டது: விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேச்சு
திமுக பொருளாளர் துரைமுருகனின் பேச்சால் தேமுதிகவின் திருஷ்டி கழிந்துவிட்டது என்று விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய பிரபாகரன், ”யாரெல்லாம் தேமுதிகவை அழிக்க நினைக்கிறார்களோ அவர்களுக்கு முன் வெற்றிபெற்று கட்சியில் பலத்தை நிரூபிப்போம். தேமுதிகவை அழிக்க நினைக்கிறவர்கள் அழிந்து விடுவார்கள்.
விஜயகாந்த் எது சொன்னாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அவரின் கட்டளையை ஏற்று அனைவரும் இந்தத் தேர்தலைச் சந்திக்க வேண்டும்.
திமுக சார்பில் துரைமுருகன் தேமுதிக கட்சிக்கு திருஷ்டியை எடுத்துவிட்டார். அவர்கள் என்ன பொய் சொன்னாலும் அவர்களையே திருப்பியடிக்கும்” என்று அவர் பேசினார்.
தேமுதிக நிர்வாகிகள் தன்னைச் சந்தித்ததாகவும், திமுக கூட்டணியில் இணைய விரும்பியதாகவும் தெரிவித்தனர். ஆனால், தான் இடமில்லை என தெரிவித்து விட்டதாக துரைமுருகன் பேட்டி அளித்தார். ஒரே சமயத்தில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனிடம் கூட்டணிக்காகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்தித்தார்கள் என்றும் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் விளக்கம் அளித்தார். இதனால் சுதீஷ்- துரைமுருகன் இடையே வார்த்தை மோதல் வெடித்தது.
இந்நிலையில் துரைமுருகனின் பேச்சால் தேமுதிகவின் திருஷ்டி கழிந்துவிட்டதாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.