5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடு குஜராத்தில் கண்டெடுப்பு: ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என அறிஞர்கள் கருத்து
குஜராத் மாநிலத்தில் நடந்த அகழாய்வில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையமனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. கட்ச்பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டு வந்தனர்.
கட்ச் மாவட்டத்தின் தோலாவிரா உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் அகழாய்வு செய்தபோது 300 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய சுடுகாடு கண்டெடுக்கப்பட்டது. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஈமக்குழிகள் இருந்துள்ளன. இதில் 26 ஈமக்குழிகள் மட்டும் அகழாய்வு செய்யப்பட்டன. இதில் ஒரு கல்லறையில் 6 அடி நீளமுள்ள முழு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
இந்த எலும்புக்கூடு 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக இருக்கும் எனத் தெரிகிறது. எனவே கட்ச் பகுதியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதிக அளவில் மனிதர்கள் வாழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த இனம், ஹரப்பா, மொஹஞ்சதோரா இனத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கட்ச் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுத்துறை தலைவர் சுரேஷ் பண்டாரி கூறும்போது, “இந்தஈமக்குழிகள் 4,600 முதல் 5,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் எனத் தெரிகிறது. இதற்கு முன்பு குஜராத்தில் கண்டெடுக்கப்பட்ட ஈமக்குழிகள் வட்டவடிவமாகவும், அரைவட்ட வடிவமாகவும் இருந்தன. முதன்முறையாக செவ்வக ஈமக்குழிகள் கிடைத்துள்ளன.
இந்த ஈமக்குழிகளின் உட்சுவர்கள் கிழக்கு-மேற்கு திசையில் பாறைகளால் மிகவும் வலுவானதாக உருவாக்கப்பட்டு உள்ளன. எலும்புக்கூட்டின் தலை கிழக்கு திசை நோக்கியும், பாதங்கள் மேற்கு நோக்கியும் கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட ஈமக்குழிகளில் மிகப்பெரிய ஈமக்குழி 6.9 மீட்டர் நீளமுள்ளதாகவும், மிகச் சிறிய ஈமக்குழி 1.2 மீட்டர் நீளமுடையதாகவும் உள்ளது.
மனித எலும்புக்கூடு மட்டுமல்லாமல் மிருகங்களின் புதைபடிவங்களும் கிடைத்துள்ளன. எனவே இறந்தவர்களின் உடல்களுடன் விலங்குகளின் உடல்களையும் புதைக்கும் வழக்கம் அப்போது இருந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் சங்கு வளையல்கள், அரைக்கும் கற்கள், சீவும்பட்டைகள், கூர்மையான சீவும் உபகரணங்கள், கல் மணிகள் ஆகியவையும் கண்டெடுக்கப்பட்டன.
பல ஈமக்குழிகளில் குறைந்தது 3 முதல் 19 வரையிலான பானைகள் எலும்புக்கூட்டின் கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இதுபோன்ற மட்பாத்திரங்கள் பாகிஸ்தானின் அம்ரி, நால், கோட் பகுதிகளிலும், இந்தியாவின் குஜராத்தில் நாக்வாடா, சத்ரத் சஹேலி, மோடி பிபாலி, சுர்கோட்தா, தானேட்டி ஆகியபகுதிகளிலும் கிடைத்துள்ளன. குழந்தைகளின் ஈமக்குழிகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டன. இந்த இடத்தில் மனித இனம் வாழ்ந்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்” என்றார்.
‘திராவிட நாகரிகத்தையே சுட்டிக்காட்டும் கூறுகள்’
இந்த அகழாய்வு குறித்து மானுடவியல் பேராசிரியர் பக்தவத்சல பாரதி கூறியதாவது:
அகழாய்வு செய்த இடத்தில் ஹரப்பாநாகரிகம் பரவியிருந்தது தெரிய வருகிறது.ஹரப்பா நாகரிகம் இறை மையச்சமூகம் (Theocentric Society) சார்ந்தது. ஏனெனில், ஹரப்பாவில் ராணுவத் தளவாடங்கள் அதிகம் கிடைக்கவில்லை.
தமிழகத்திலும் செவ்வக ஈமக் குழிகள் (கல்லறைகள்) உள்ளன. கோவை இருபூர் என்னும் இடத்தில் கிழக்கு பார்த்துத் தலை இருந்தது. கொடுமணல் அகழாய்விலும் வடக்கு நோக்கித் தலைஇருந்தது. பெருங் கற்காலப் பதுக்கைகளில் (cist burial) கிழக்கில்தான் ஓட்டை உள்ளது.
இறந்த மனிதனைச் சுற்றி விலங்கினப் புதைபடிவங்கள் கிடைக்கும். அந்த விலங்குகள் அவனது குலக்குறியாக (totem) இருக்கலாம். மான் கூட்டத்தைச் சேர்ந்த மனிதனாக இருந்தால் மான்கள் புதைக்கப்படும்.
கொடுமணல் அகழாய்வில் ஒரே குழியில் இருபது முப்பது பானைகள் கிடைத்தன. எல்லா பானைகளிலும் ஒரே குறியீடு காணப்பட்டது. இது அவர்களது குலத்தின்(clan) குறியாக இருக்கலாம். திராவிடர்களைப் பொறுத்தவரை புதைத்தல்தான் தொன்மையான ஈமச் சடங்கு. வேளாண் சமூகத்தினரான திராவிடர்கள் விதையை ஊன்றிப் பயிர் விளைவிப்பதைப் போலவே உயிர் பிரிந்த பிறகு உடல்களைப் புதைப்பதை வழக்கமாக வைத்திருந் தார்கள். அப்படிப் புதைப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் மீண்டும் குழந்தைகளாகப் பிறப்பார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு நிலவியது.
ஹரப்பா நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதைத் தென்னகத்தில் உள்ள நாம் மட்டுமல்ல உலகப் புகழ்பெற்ற வெளிநாட்டு ஆய்வாளர் கள் பலரும் நிறுவிய உண்மை. அதன்படி பார்த்தால் தற்போது நிகழ்த்திய அகழாய்வில் தெரிய வரும் கூறுகள் நமக்கு திராவிட நாகரிகத்தையே சுட்டிக்காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.