ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5-வது வெற்றியை பெறப்போவது யார்? சென்னை-கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டோனி தலைமையிலான சென்னை அணி 5 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (பெங்களூரு, டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வி (மும்பை அணியிடம்) கண்டுள்ளது. இதேபோல் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி 5 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றியை (ஐதராபாத், பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) ஈட்டி இருக்கிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது.
சென்னை அணியில் கேப்டன் டோனி, காயம் அடைந்த வெய்ன் பிராவோவுக்கு பதிலாக களம் கண்ட பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். கொல்கத்தா அணியை பொறுத்தமட்டில் கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆந்த்ரெ ரஸ்செல் பேட்டிங்கில் அதிரடி காட்டி கலக்கி வருகிறார். அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி, 7 சிக்சருடன் 48 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தினார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொறுத்த வரையில் பொதுவாக சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும். சென்னை அணியில் சுழற்பந்து வீச்சில் அசத்தக்கூடிய ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உள்ளனர். இதேபோல் கொல்கத்தா அணியில் மாயாஜால சுழலில் அபாரமாக செயல்படக்கூடிய குல்தீப் யாதவ், சுனில் நரின், பியூஸ் சாவ்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சீசனில் சென்னை அணி உள்ளூரில் விளையாடும் 4-வது போட்டி இதுவாகும். முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக சென்னை அணி வெற்றி கண்டு ஆதிக்கம் செலுத்தி வருவது போல் இந்த ஆட்டத்திலும் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செலின் அதிரடியை சென்னை அணியினர் எந்த அளவுக்கு தடுத்து நிறுத்துகிறார்கள் என்பதை பொறுத்தே இந்த ஆட்டத்தின் போக்கு அமையும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் 5-வது வெற்றியை பெறுவதற்கு மல்லுக்கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 11 முறையும், கொல்கத்தா அணி 7 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றனர். இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணி வீரர்கள் வருமாறு:-
சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), ஷேன் வாட்சன், பாப் டுபிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், ஸ்காட் குஜ்ஜெலின், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, சுப்மான் கில், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல், பியூஸ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி குர்னே, பிரசித் கிருஷ்ணா.