பாஜக தேர்தல் அறிக்கை; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்
நாடாளுமன்றத்துக்கான முதல் கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடைபெற இருக்கிறது. இந்தநிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று டெல்லியில் வெளியிடப்பட்டது. அக்கட்சியின் தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கை ‘உறுதிகொண்ட இந்தியா, அதிகாரம் படைத்த இந்தியா’ என்ற தலைப்பில் 45 பக்கங்களை கொண்டதாக இருந்தது.
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகிலேயே 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். 2025-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார நிலையையும், 2032-ம் ஆண்டுக்குள் 10 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார நிலையையும் இந்தியா அடைவதை இது குறிக்கிறது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம். 60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு தனியாக ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் பாஜக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பாஜக தேர்தல் குறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ தனித்துவிடப்பட்டவரின் குரலாகவும், குறுகிய பார்வை மற்றும் ஆணவத்தனம் கொண்டதாக பாஜக தேர்தல் அறிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி கூறியிருப்பதாவது, “ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழு ஆலோசனைக்கு பிறகு உருவாக்கப்பட்டது. பாஜக தேர்தல் அறிக்கை மூடிய அறைக்குள் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.