6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிக்கல்வி துறையின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அனைத்து அரசு, அரசு உதவிபெறும், ஆதிதிராவிடர், சமூக நலத்துறை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் ஏப்ரல் 2010-ன் படி 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.
இச்சட்டத்தின்படி 6, 7, 8 வகுப்புகளில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கவில்லை என்றால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களே பின்னர் வரும் விளைவுக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
மே 2-ந் தேதி தேர்வு முடிவு
6, 7, 8, 9-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நெறிமுறைகளை பின்பற்றி அதை சார்ந்த ஆய்வு அலுவலர்களின் ஒப்புதல் பெற்று மே மாதம் 2-ந் தேதி வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், 9-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளின் பட்டியல் உடனடியாக மாவட்ட கல்வி அலுவலருக்கு ஒரு நகலும், மற்றொரு நகலை வினாத்தாள் அமைப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்ச்சி முடிவுகள் அறிவிப்பதில் எந்தவித புகாருக்கும் இடம் அளிக்காமல், முழு பொறுப்புடன் செயல்பட அனைத்து ஆய்வு அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடி தேர்வு
பொதுவாக 9-ம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தோல்வி அடைந்தால், மீண்டும் அதே வகுப்பில் படித்து தேர்ச்சி பெற வேண்டும். ஆனால் தற்போது 9-ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு நடத்தி எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறை ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், ‘அனைத்து வகை பள்ளிகளிலும் 9-ம் வகுப்பு பாடத்தேர்வுகளில் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளின் பட்டியலை தலைமை ஆசிரியர் கையொப்பமிட்டு ஒரு நகலை மேலொப்ப குழுவிடமும், மற்றொரு நகலை முதன்மை கல்வி அலுவலரின் பெயரிட்ட முகவரிக்கும் அனுப்ப வேண்டும். தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.