ஐபிஎல் கிரிக்கெட்: “ஆட்டநாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்” மும்பை வீரர் பொல்லார்ட் பேட்டி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த திரிலிங்கான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது. இதில் லோகேஷ் ராகுலின் (100 ரன்) சதத்தின் உதவியுடன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறியது. கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 133 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த சமயம் விசுவரூபம் எடுத்த மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் கீரன் பொல்லார்ட் ரன்மழை பொழிந்தார். அவரது அசுரத்தனமான மட்டையின் சுழற்சி, ஆட்டத்தை மும்பை அணியின் பக்கம் திருப்பியது. வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 4 ரன் தேவை என்ற நிலை வந்த போது பொல்லார்ட் (83 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது அல்ஜாரி ஜோசப் (15 ரன், நாட்-அவுட்) 2 ரன் எடுத்து மும்பை ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இது தான்.
ஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-
சிறப்பாக செயல்பட எனக்கு வலுவான சக்தியும், கடினமான கட்டத்தில் போராடும் துணிச்சலும் அளித்த கடவுளுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்வது என்றாலே எனக்கு கொண்டாட்டம் தான். அதனால் தான் கொஞ்சம் முன்வரிசையில் இறங்கி விளையாடினேன். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் திரும்பவில்லை. அதனால் அஸ்வின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும், அவரது ஓவர்களில் மட்டும் 5-6 சிக்சர்கள் விளாசி ரன்ரேட் தேவையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் நினைத்த மாதிரி நடக்கவில்லை. இருப்பினும் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து பொறுமையுடன் செயல்பட வேண்டி இருந்தது. இந்த ஆடுகளம், பந்து வீச்சுக்கு கடினமானது. பேட்டிங்குக்கு எளிதானது. ஒவ்வொரு சிக்சரையும் அடிக்கும் போது உற்சாகம் பீறிட்டது. பந்தை ரசிகர்கள் பகுதிக்கு விரட்டுவதை பார்ப்பதே தனி சந்தோஷம் தான்.
பஞ்சாப் அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் கடைசி 2-3 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு திட்டமிட்டபடி அமையவில்லை. நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். இங்கு, இந்த இலக்கை எட்ட முடியும் என்பது தெரியும். என்னை பொறுத்தவரை எந்த இலக்கை எட்டுவதும் சாத்தியமே என்று நம்பக்கூடியவன் நான். அதற்கு ஏற்ற வகையில் ‘பவர்-பிளே’யில் எங்களது பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். நானே இறுதிவரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டேன்.மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்த 6 நாட்களில் நாங்கள் 2 ஆட்டங்களில் விளையாட உள்ளோம். அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் அவர் உடல்தகுதியுடன் இருப்பார். அவரிடம் கேப்டன்ஷிப்பை திரும்ப வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது மனைவிக்கு இன்று (நேற்று முன்தினம்) பிறந்த நாள். வெற்றிக்குரிய இந்த ஆட்டநாயகன் விருதை அவருக்கு அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு பொல்லார்ட் கூறினார்.
பொல்லார்ட்டிடம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உங்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதிலில், ‘வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் களத்தில் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய குழப்பம் நிலவியது. அவர்கள் வைத்திருந்த விரும்பத்தகாத வீரர்களின் பட்டியலில் நானும் (2016-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை) ஒருவன். ஆனால் என்னை பொறுத்தவரை எப்போதும் கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்தாலும் அதிக ரன்கள் எடுக்கவே முயற்சிக்கிறேன். சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேர்வு கமிட்டிக்கு புதிய தலைவர் வந்திருக்கிறார். அதனால் தேர்வு கமிட்டி என்ன செய்யப்போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும். எனக்கு இப்போது வயது 31. கிறிஸ் கெய்ல் 39 வயதிலும் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டுகிறார். என்னாலும் இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். புதிய தேர்வு குழு இதை எல்லாம் கவனத்தில் கொள்வார்களா? என்பதை பார்ப்போம். உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருக்கிறது’ என்றார்.
தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘எங்களது பீல்டிங் மெச்சும்படி இல்லை. அனேகமாக நாங்கள் இன்னும் சாதுர்யமாக செயல்பட்டு இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். இது வெற்றிக்குரிய ஸ்கோர் என்றே நினைத்தேன். ஆனால் இந்த மைதானத்தில் இவ்வளவு ஸ்கோரை வைத்து கொண்டும் எதிரணியை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டது. 10-12 ஓவர் வரை எங்களது ரன்ரேட் 10 ரன்கள் வரை இருந்தது. அதன் பிறகு சில ஓவர்கள் ரன்வேகம் தளர்ந்தது. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். பொல்லார்ட்டின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அவர் எங்களது வெற்றி வாய்ப்பை பறித்து விட்டார்’ என்றார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் முதுகுவலியால் அவதிப்படுவதாக கூறிய அஸ்வின், காயத்தன்மை குறித்து பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். அடுத்த ஆட்டத்தில் கெய்ல் ஆடுவது சந்தேகம் தான்.