உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் வெற்றி
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011-ம் ஆண்டு ‘ஸ்ட்ராடோலான்ச்’ என்கிற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம், வானில் விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதில் இருந்து விண்கலங்களை ஏவும் வகையில் பிரமாண்டமான விமானத்தை தயாரித்தது.
அதாவது, இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பிறகு அதில் இருந்து விண்கலத்தை ஏவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், விண்கலங்களை பூமியின் நிலப்பரப்பில் இருந்து ஏவுவதைவிட குறைவான செலவில் விண்ணில் இருந்து ஏவலாம்.
இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போல 6 என்ஜின்களுடன் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறக்கைகளின் அடிப்படையில் இந்த விமானம் தான் உலகிலேயே மிகப்பெரிய விமானம் ஆகும். இந்த விமானத்தின் 2 இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட அதிகமானதாகும்.
சோதனை ஓட்டமாக இந்த விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கியது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மோஜவே விமான தளத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டு சென்றது. அப்போது இந்த விமானம் மணிக்கு 274 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 17,000 அடி உயரத்துக்கு பறந்தது. 2½ மணி நேர பயணத்துக்கு பிறகு விமானம் மீண்டும் மோஜவே விமான தளத்துக்கு திரும்பி பாதுகாப்பாக தரையிறங்கியது.
மேற்கூறிய இந்த தகவல்கள் ‘ஸ்ட்ராடோலான்ச்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.