ஆசிய குத்துச்சண்டை: 4 பதக்கங்களை உறுதி செய்தது, இந்தியா
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு கால்இறுதியில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 3-2 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியன் கைராத் யெராலிவ்வை (கஜகஸ்தான்) வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். 52 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பன்ஹால், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஹசன்பாய் துஸ்மதோவை (உஸ்பெகிஸ்தான்) சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். 49 கிலோ எடைப்பிரிவில் தேசிய சாம்பியனான இந்திய வீரர் தீபக் சிங்கை எதிர்த்து களம் காண வேண்டிய ஆப்கானிஸ்தான் வீரர் ரமிஷ் ரஹ்மானி காயம் காரணமாக விலகியதால் தீபக் சிங் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதியில், உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சோனியா சாஹல் 3-2 என்ற கணக்கில் கொரியாவின் ஜோ சன்னை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். 4 இந்தியர்களும் அரைஇறுதிக்கு முன்னேறியதன் மூலம் குறைந்தபட்சம் 4 வெண்கலப்பதக்கங் களை உறுதி செய்துள்ளனர்.