Breaking News
இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் பலி – சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

இலங்கை குண்டுவெடிப்பில் கர்நாடகத்தை சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா சென்றபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

இலங்கையில் நேற்றுமுன்தினம் 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 295 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் இந்தியர்களும் இறந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஒரு பெண் பலியானது முதலில் தெரிந்தது. இப்போது மேலும் 6 பேர் பலியானது தெரியவந்துள்ளது.

கர்நாடகத்தை சேர்ந்த ரமேஷ், கே.எம்.லட்சுமி நாராயண், எம்.ரங்கப்பா, கே.ஜி.ஹனுமந்தராயப்பா ஆகிய 4 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் துமகூரு மற்றும் நெலமங்களா பகுதியை சேர்ந்தவர்கள். இலங்கைக்கு சுற்றுலா சென்ற 7 பேரில் 4 பேர் பலியாகி உள்ளனர். மற்ற 3 பேர் மாயமானதாக முதலில் கூறப்பட்டது.

அவர்களில் சிவக்குமார் என்பவரும், கர்நாடகத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரும் உயிரிழந்த தகவல் மாலையில் வெளியானது. 7 பேரும் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணியாற்றினர். தேர்தல் முடிவடைந்த பிறகு 7 பேரும் கடந்த 20-ந் தேதி இலங்கைக்கு சென்றனர். அவர்களில் 5 பேர் இறந்து விட்டனர்.

கர்நாடகத்தை சேர்ந்தவர்கள் மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி குமாரசாமி, வீரப்பமொய்லி எம்.பி. ஆகியோர் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கர்நாடக மேல்-சபை உறுப்பினரும், சினிமா தயாரிப்பாளருமான சி.ஆர்.மனோகர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். குண்டுவெடிப்பு நடந்த ஷாங்கரிலா ஓட்டலில் முதலில் தங்கிய அவர், அங்கு அசவுகரியமாக இருந்ததால் அறையை காலி செய்துவிட்டு, அருகில் உள்ள வேறு ஒரு ஓட்டலில் தங்கினார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் ஷாங்கரிலா ஓட்டலில் குண்டு வெடித்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இதனால் அவர் கர்நாடகம் திரும்பிவிட்டார்.

கொழும்பு நகரில் கிரிக்கெட் வீரர் அனில் கும்பிளே குடும்பத்துடன் இருந்ததை பார்த்ததாகவும், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு அவரும் பெங்களூரு திரும்பிவிட்டதாகவும் மனோகர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.