‘உள்ளாட்சி தேர்தலை காலதாமதம் இன்றி நடத்துங்கள்’மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் மனுதாக்கல் செய்திருப்பதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
மே மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அந்த கெடு முடியும் வரை அமைதியாக இருந்து விட்டு கடைசி நேரத்தில் அ.தி.மு.க. அரசின் ஊதுகுழலாக மாறியுள்ள மாநில தேர்தல் ஆணையம் கால அவகாசம் கேட்டிருப்பது உள்ளாட்சி ஜனநாயகத்தை படுகொலை செய்யும் சட்டவிரோத செயலாகும்.
ஜனநாயக கேலிக்கூத்து
2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சி தேர்தல் இதுவரை நடைபெறவில்லை. இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மாநிலம் முழுவதும் குப்பை மேடுகள் போல் குவிந்து நிற்கின்றன. கிராம நிர்வாகம் அடியோடு ஸ்தம்பித்து விட்டது. கடும் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிற இந்த நேரத்தில் மக்கள் தங்களின் தாகம் தீர்க்கும் உள்ளாட்சி நிர்வாகமோ, உள்ளாட்சி பிரதிநிதிகளோ இல்லாமல் தவிக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலை 31.12. 2016-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு முதன் முதலில் அளித்த தீர்ப்பின் மீது எண்ணற்ற முறை கால அவகாசம் பெற்றது அ.தி.மு.க. ஆட்சி. நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகி நீதிமன்றத்திடம் இந்த அரசும், மாநில தேர்தல் ஆணையமும் சேர்ந்து பலமுறை குட்டுகள் வாங்கிய பிறகும், திருந்தவே மாட்டோம் என்று வெளிப்படையாகவே கூட்டணி அமைத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றன.
சந்து பொந்துகளில்…
தி.மு.க. வழக்கு போட்டதால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை என்ற ஒரு பொய் பிரசாரத்தை மேற்கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் இப்போது ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் கால அவகாசம் பெற்று வருகிறார்.
உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து காரணம் தேடுவதை அவரும், உள்ளாட்சி துறை அமைச்சரும் இதுவரை நிறுத்தி கொள்ளவில்லை. தேர்தல் வைத்தால் தோல்வியும் சேர்ந்தே வரும் என்ற அச்சமே அவர்களை உள்ளாட்சி தேர்தல் நடத்த விடாமல் தடுக்கிறது.
8 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி முதல் மாநகராட்சி வரை நடைபெற்றுள்ள மெகா ஊழல்கள் அணிவகுத்து நிற்கின்றன. நிர்வாக சீரழிவுகள் துர்நாற்றம் அடிக்கிறது.
காலதாமதம் கூடாது
இவற்றை எல்லாம் நேரடியாக பார்த்து கொண்டிருக்கும் மக்கள் தங்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும், அ.தி.மு.க. அரசுக்கு படுதோல்வியை பரிசாக கொடுப்போம் என்று காத்திருக்கிறார்கள். தோல்வி பயத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் காலதாமதம் செய்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. ஆட்சி நிச்சயமாக மக்கள் நலனில் அக்கறை இல்லாத உதவாக்கரை ஆட்சி என்று நான் பிரசாரம் செய்தது சரிதானே என்று மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
கிராம ராஜ்யத்தின் உயிர் மூச்சான உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏறக்குறைய 30 மாதங்களாக தேர்தல் நடத்தாமல் ஐகோர்ட்டிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் வாய்தா வாங்கிக்கொண்டு கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை நாசமாக்கும் அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் எப்போது தேர்தல் வந்தாலும் மன்னிக்க மாட்டார்கள். தக்க பாடம் புகட்ட தயாராகவே இருக்கிறார்கள்.
ஆகவே ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அ.தி.மு.க. ஆட்சியும், மாநில தேர்தல் ஆணையமும் உடனடியாக கைவிட்டு, மக்களின் குறைகள் தீர்க்கும் நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு தேவையான உள்ளாட்சி தேர்தல்களை இனியும் காலதாமதம் இன்றி நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.