மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
மதுரை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் போலீசார், கைதிகள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில் நேற்று மாலை 3.30 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். 2 கைதிகள் இருந்த அறையில் சோதனை செய்த போது, அங்கு கஞ்சா மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியதாக தெரியவருகிறது. இதன் காரணமாக போலீசார், சில கைதிகளை தாக்கி விசாரித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சிறை அதிகாரிகள் அந்த கைதிளை விசாரிக்க வேறு இடத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது மற்ற கைதிகள், அவர்களை அதிகாரிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உடனே கைதிகள் சிலர், அறைகளில் சோதனையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அழைத்து செல்லும் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும் அங்குள்ள மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். நேரம் செல்லச்செல்ல இந்த சம்பவம் விசுவரூபம் எடுத்ததால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.இதை அறிந்த கைதிகள் சிறை வளாகத்தில் கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசினர். இதனால் போலீசார், பிடித்துச் சென்ற கைதிகளை விடுவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் கைதிகள் ஆத்திரம் அடங்காமல் சிறைக்குள் இருந்து கற்கள் மற்றும் சாப்பிடும் தட்டுகளை சிறைக்கு வெளியே, அரசரடி சாலையில் எறிந்தனர். திடீரென்று கற்கள் வீசப்பட்டதால் அந்த சாலையில் வாகனங்களை ஓட்டிச் சென்றவர்கள் பதற்றம் அடைந்த னர். உடனே போலீசார் அரசரடி சாலை வழியாக வாகனங்கள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.
இதற்கிடையில் 20-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையின் மேற்கூறை மீது ஏறி, மதில் சுவரை நெருங்கி வந்து அங்கிருந்து கீழே குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தனர். ஒரு சில கைதிகள் போலீசார் தங்களை மீண்டும் தாக்கக்கூடும் என்ற பயத்தில் தங்களின் உடல்களில் அவர்களே கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கீறி காயங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த சம்பவங்களால் சிறைக்குள் ஒரு போர்க்களம் போல் காணப்பட்டது.
பின்னர் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி தலைமையில் அதிகாரிகள் மற்றும் மேற்கு தாசில்தார் கோபிதாஸ் ஆகியோர் வந்து கைதிகளிடம் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. அதை தொடர்ந்து சிறையின் மேற்கூரையில் இருந்த கைதிகள் கீழே இறங்கி வந்தனர். மற்ற கைதிகள் அனைவரும் தாங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றனர். அதை தொடர்ந்து சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
வழக்குப்பதிவு
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது 4 பிரிவின் கீழ், கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிகாரிகளை பணி செய்ய விடாமல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.