வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை கோடை வெயிலில் மிரட்டும் புயல்
தமிழகத்தில் கோடைவெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக ‘கத்தரி’ வெயில் காலம் தொடங்குவதற்கு முன்பே மதுரை, திருத்தணி, வேலூர், கரூர், சேலம், திருச்சி, உள்பட நகரங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது.
வெயிலின் தாக்கம், அனல் காற்று, உஷ்ணம் போன்றவற்றால் மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கவும், இளைப்பாறவும் சுற்றுலா தளங்களை நோக்கி மக்கள் படையெடுக்கிறார்கள்.
வெயில் சுட்டெரிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே கோடைமழை பொழிந்து மக்களை குளிர்வித்து வருகிறது.
வானிலை அறிவிப்பு
இந்தநிலையில் கோடை வெயிலில் தவிக்கும் மக்களுக்கு மேலும் ஒரு தவிப்பை ஏற்படுத்திடும் வகையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு தகவலை நேற்று வெளியிட்டது.
அந்த அறிக்கையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது என்றும், இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து புயலாக மாறி, 30-ந்தேதி தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
அப்போது 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன்காரணமாக தமிழகம், ஆந்திரா மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இந்தநிலையில் தமிழகத்தில் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலான 3 நாட்கள் அதிக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று (நேற்று) காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. தற்போது இது வலுவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அந்த பகுதியில் நிலைகொண்டு உள்ளது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.
வருகிற 27 மற்றும் 28-ந்தேதிகளில் புயலாக வலுப்பெற்று, தற்போதைய நிலவரப்படி வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதனால் மீனவர்கள் 26-ந்தேதி (இன்று) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும், 27 மற்றும் 28-ந்தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
3 நாட்கள் அதிக மழை
தற்போதைய நிலவரப்படி இது 1,500 கி.மீ. தொலைவில் 85 டிகிரி கிழக்கு திசைப்பகுதியில் இருக்கிறது. இதன் சரியான நகர்வுகள், புயல் கரையை கடக்கும் நேரம் ஆகியவற்றை அடுத்தடுத்த நாளில் தான் சொல்லமுடியும். தற்போது வரை அது புயலாக மாறவில்லை.
இதுகுறித்து 29-ந்தேதிக்கு பிறகே உறுதியாக கூறமுடியும். 28, 29, 30-ந்தேதிகளில் தமிழகத்தில் அதிக மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. காற்றின் வேகம், மழை குறித்த விவரங்கள் மற்றும் புயல் கரையை கடக்கும் இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகபட்ச மழை
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தலா 3 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் கூடலூரில் 2 செ.மீ. மழையும் பதிவாகி இருக்கிறது.
அதிர்ச்சியும், பீதியும்…
கத்தரி வெயிலை எப்படி சமாளிக்க போகிறோம்? என்ற தவிப்பிலும், மழை பெய்துவிடாதா? என்று எதிர்பார்ப்பிலும் இருந்த மக்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ‘கஜா’ புயலின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், இப்போது இன்னொரு புயலை எதிர்கொள்வது குறித்து பீதியடைந்து வருகின்றனர்.