ஐதராபாத் அணி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்குமா?: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் இன்று மோதல்
பெங்களூரு, ஐதராபாத் அணிகளுக்கும் நடப்பு தொடரில் இதுவே கடைசி லீக் ஆட்டமாகும். 9 புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ள விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி அடுத்த சுற்று வாய்ப்பை முன்பே இழந்து விட்டது. அதனால் அந்த அணியை பொறுத்தவரை ஆறுதல் வெற்றிக்காக களம் காணும்.
முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு தான் இந்த ஆட்டம் மிகவும் முக்கியமானதாகும். 6 வெற்றி, 7 தோல்வி என்று மொத்தம் 12 புள்ளிகள் பெற்றுள்ள ஐதராபாத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் ‘பிளே–ஆப்’ சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். சாதகமான முடிவை பெற்றாலும் அடுத்த சுற்று வாய்ப்புக்காக நாளை வரை காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் அதிக வித்தியாசத்தில் வாகை சூடி ரன்ரேட்டை (தற்போது ரன்ரேட் +0.653) இன்னும் திடப்படுத்திக்கொண்டால், ஐதராபாத் அணியின் பிளே–ஆப் சுற்றுக்கு மற்ற அணிகளினால் உருவாகும் ஆபத்து வெகுவாக குறைந்து விடும். டேவிட் வார்னர் (ஒரு சதம், 8 அரைசதத்துடன் 692 ரன்) தாயகம் திரும்பிய பிறகு ஐதராபாத் அணி தள்ளாடித்தான் போனது. மனிஷ் பாண்டே (3 அரைசதத்துடன் 305 ரன்) சற்று நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். கேப்டன் வில்லியம்சன், விஜய் சங்கர் உள்ளிட்டோரின் சீரற்ற ஆட்டம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்கள் இன்னும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அவர்கள் பார்முக்கு திரும்பினால், ஐதராபாத்தின் பேட்டிங் வலுவடையும். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடி இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்த்து உள்ளூரில் உயரிய நிலையுடன் ஆட்டத்தை முடிக்கும் வேட்கையுடன் பெங்களூரு அணியினர் இருப்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.