புளோரிடாவில் 136 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றில் பாய்ந்தது
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே இருந்த ஆற்றில் பாய்ந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். ஆழமற்ற பகுதியில் விமானம் பாய்ந்தது. இதனால், விமானம் நீரில் மூழ்கவில்லை. இதன்காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம், குவாண்டநாமோ வளைகுடா கடற்படை நிலையத்தில் இருந்து புறப்பட்ட வணிக ரீதியிலான விமானம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் நேரப்படி, இரவு 9.40 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.