ராணுவம் நாட்டுக்கு சொந்தமானது, தனி ஒருவருக்கு சொந்தமானது இல்லை -ராகுல் காந்தி விமர்சனம்
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி கூறியதாவது:- நாங்கள் மேற்கொண்ட ஆய்வின்படி, பாரதீய ஜனதா மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்துவிடும் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
இந்திய பொருளாதாரத்தை மோடி சீரழித்துவிட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் நடந்த சர்ஜிக்கல் தாக்குதல்களை வீடியோ கேம்களுடன் ஒப்பிட்ட மோடி, இந்திய ராணுவத்தை இழிவு படுத்திவிட்டார். ராணுவம் நாட்டுக்கு சொந்தமானது. தனி ஒரு நபருக்கு சொந்தமானது இல்லை.
நமது படை வீரர்களை வைத்து நாங்கள் அரசியலில் ஈடுபட மாட்டோம். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியாத அச்சப்படும் பிரதமரை நான் பார்க்கிறேன். மசூத் அசார் ஒரு பயங்கராவாதி அவன், கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும்.
ஆனால், மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது யார்? காங்கிரஸ் ஒருபோதும் பயங்கரவாதிகளை பாதுகாப்பாக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது இல்லை. நாங்கள் ஒருபோதும் இதை செய்ய மாட்டோம்” என்றார்.