கமல்ஹாசன் பரப்புரையின் போது முட்டை, கல் வீசப்பட்ட சம்பவம்: பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
கமல்ஹாசனின் பரப்புரை கூட்டத்தில் முட்டை, கல் வீசிய பாஜக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் கரூர் ஒன்றிய பாஜக இளைஞரணி பொதுச்செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிச்சாரங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் திமுக, அதிமுக, ம.நீ.ம சார்பில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்த நிலையில் அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். சர்ச்சைக்குரிய அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், இரு நாட்கள் கழித்து நேற்று மீண்டும் அரவக்குறிச்சி தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தை முடித்துவிட்டு செல்லும் போது, அவரை நோக்கி 2 செருப்புகள் அடுத்தடுத்து வீசப்பட்டன. தொடர்ந்து முட்டை, கல் போன்றவை வீசப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் மீது படவில்லை. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைக்கண்ட மக்கள் நீதிமய்யம் கட்சியினர் ஒருவரை பிடித்து தாக்கியுள்ளனர். அவரை மீட்டு போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் 2 பேர் தப்பிவிட்டதும் தெரியவந்தது. மேலும் கல்ஹாசன் நின்று கொண்டிருந்த மேடை மீது செருப்பு வீசியவர் பாஜக-வின் கரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது வேலாயுதம் காவல் நிலையத்தில் கலவரத்தை உருவாக்குதல், சட்ட விரோதமாக கூடுவது, பொருட்களை வீசி அவமானம் படுத்துவது போன்ற ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.