7-வது இறுதிக்கட்ட தேர்தல்: 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகிறது தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளிலும் விறு விறு வாக்குப்பதிவு
நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுக்கான 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு விறு விறுப்புடன் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இறுதிக்கட்ட தேர்தல்
இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்து விட்டன. 7-வது இறுதிக்கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைப்பெற்று வருகிறது.
பீகாரில் 8, ஜார்கண்டில் 3, சண்டிகாரில் 1, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13, உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்காளத்தில் 9 என மொத்தம் 59 தொகுதிகளில் இன்று 7-வது இறுதிக்கட்டதேர்தல் நடைப்பெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 7-ம் கட்ட தேர்தலை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் சந்திக்கிறார்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆர்வத்துடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இறுதிக்கட்ட மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் வாக்களித்தார்.
உத்தரபிரதேசத்தில் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக பிரச்னை எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
4 தொகுதி இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைப்பெற்று வருகிறது.
பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 13 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சூலூர் கருமத்தம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் 2 பொத்தான்கள் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேனி 197-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது சீர்செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது.
7-வது இறுதிக்கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்ததும், மாலை 6 மணிக்கு பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டு எண்ணிக்கை 23-ந் தேதி நடைபெறும். அன்று மாலையில் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என தெரியவந்து விடும்.