ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ள ஒப்புகை சீட்டு எந்திரத்தை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது. இந்த ஒப்புகை சீட்டு வாக்களிக்கும் போது சில வினாடிகள் அந்த எந்திரத்தில் தெரியும். பின்னர் எந்திரத்துடன் உள்ள பெட்டியில் சேமிக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் உள்ள 5 வாக்குச்சாவடிகளை சேர்ந்த ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. உதாரணத்துக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டசபை தொகுதிகள் இருந்தால் 30 வாக்குச்சாவடியில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஓட்டுகள் எண்ணப்பட்ட பிறகு கடைசியில் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
ஆனால் இதை முதலில் எண்ண வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஆகும்.
ஒரு வாக்குச்சாவடியில் குளறுபடி காணப்பட்டாலும் சட்டசபைத் தொகுதியில் உள்ள அனைத்து சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பதிவு மற்றும் விவிபாட் அச்சிட்ட பதிவுகளை சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில் விவிபாட் ஒப்புகை சீட்டுகளை முதலில் எண்ண வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் எந்தஒரு மாற்றமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.