சுவையான கொத்தமல்லித்தழை புலாவ் ரெசிபி!
சாம்பார், ரசம், பிரியாணி என எதை சமைத்தாலும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறானால் அதன் ருசியே தனி. அவ்வளவு சுவைநிறைந்த கொத்தமல்லித்தழையில் புலாவ் செய்து சாப்பிட நீங்க ரெடியா? இதோ உங்களுக்கான கொத்தமல்லித்தழை புலாவ் ரெசிபி!
தேவையானவை: கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு, பாஸ்மதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – அரை கப், தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 4, இஞ்சி – சிறு துண்டு, பூண்டு – 4 பல், எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், லவங்கம், ஏலக்காய் – தலா ஒன்று, பட்டை – சிறு துண்டு, எண்ணெய், உப்பு, நெய், – தேவையான அளவு!
செய்முறை: கொத்தமல்லித்தழையை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பெரிய வெங்காயத்தை நீளமாக, மெல்லியதாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் கொத்தமல்லித்தழை சேர்த்து விழுதாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர், அரைத்த கொத்தமல்லி விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, தேங்காய்ப் பால் ஆகியவற்றை சேர்த்துக் கிளறி, இரண்டரை கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாக கொதித்து வந்ததும், கழுவிய அரிசியை சேர்த்து நன்றாக கிளறி குக்கரை மூடவும். ஆவி வந்ததும் வெயிட் போட்டு அடுப்பை சிம்-ல் வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். கமகமக்கும் கொத்தமல்லித்தழை புலாவ் தயார்!!