ஆசிய போட்டியில் வெள்ளி வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார்
ங்கோலியாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ உடல் எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ரீனாவிடம் நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தோல்வியை சந்தித்துள்ளார். அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ரீனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன்ஷரன் கருத்து தெரிவிக்கையில், ‘ரீனா ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்து இருப்பதை உலக மல்யுத்த சம்மேளனம் சில தினங்களுக்கு முன்பு எங்களுக்கு தெரிவித்தது. வலி பிரச்சினைக்கு தனது பயிற்சியாளரின் ஆலோசனைபடி ஊசி போட்டதில் தவறு நடந்து இருக்கலாம் என்று ரீனா விளக்கம் அளித்துள்ளார். இது நல்ல செய்தி அல்ல. நாங்கள் மீண்டும் உலக மல்யுத்த சம்மேளனத்துக்கு ரூ.16 லட்சம் அபராதம் செலுத்த வேண்டி இருக்கிறது. தற்போது எங்களால் இந்த தொகையை செலுத்த முடிகிறது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பணம் செலுத்த முடியாத நிலையில் தான் இருந்தோம். கடந்த 12 மாதங்களில் நாங்கள் ரூ.32 லட்சம் அபராதம் செலுத்தி இருக்கிறோம். இது 3–வது ஊக்க மருந்து பிரச்சினை ஆகும். தகுதி சுற்றின் போது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி வீரர்களிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தினால் இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்கலாம்’ என்றார்.