கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவு: ஈபிள் கோபுரத்தில் சாகச பயணம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள ‘ஈபிள் கோபுரம்’ உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும். மேலும் இது உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. 1887-ம் ஆண்டு தொடங்கிய ஈபிள் கோபுரத்தின் கட்டுமான பணிகள் 2 ஆண்டுகள் 2 மாதங்கள் மற்றும் 5 நாட்களுக்கு பிறகு தான் முடிவு பெற்றதாக கூறப்படுகிறது. 1889-ம் ஆண்டு மார்ச் மாதம் ஈபிள் டவர் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈபிள் கோபுரம் தற்போது தனது 130-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதையொட்டி இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஈபிள் கோபுரத்தில் சாகச பயணம் செய்யும் வகையில் பிரத்தியேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈபிள் கோபுரத்தின் மேல் தளத்திலிருந்து, 800 மீட்டர் தொலைவில் உள்ள 18-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராணுவ அலுவலகம் வரை கம்பி கட்டப்பட்டுள்ளது.
இந்த கம்பியில் பொருத்தப்பட்ட பெல்ட்டில் அமர்ந்துகொண்டு கம்பி வழியே பறந்து சென்று, பாரீஸ் நகரின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்த வசதி பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு சமூக வலைத்தளங்கள் மூலம் நடத்தப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.