Breaking News
கல்லூரி மாணவிகள் உள்பட4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் தம்பதி கைது

திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே உள்ள ஒரு இடத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்த போது கருக்கலைப்பு செய்ய மருந்துக் கடையுடன் கூடிய பெட்டிக் கடையில் ரகசியமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை கிருஷ்ணாநகரை சேர்ந்த பிரபு (வயது 45), இவருடைய மனைவி கவிதா (41) ஆகியோர் போலி டாக்டர் கள் என்பதும், இவர்கள் 2 பேரும் சேர்ந்து கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடையில் இருந்து கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மருந்து பொருட்கள், ஊசிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுபற்றி அறிந்ததும் கலெக்டர் கந்தசாமி சம்பவ இடத்துக்கு வந்து நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்தார்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த கர்ப்பிணி திடீரென சிகிச்சைக்கு வரவில்லை. இதனால் அந்த பெண்ணின் வீட்டில் விசாரணை செய்த போது அந்த பெண் கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. விசாரணை செய்ததில் திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து நடத்திய ஆய்வில் முன் பகுதியில் பெட்டிக்கடை போன்று செயல்பட்ட இடத்தில் உள்பகுதியில் ரகசியமாக கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த போது இங்கு அடிக்கடி திருமணமான பெண்கள், கல்லூரி மாணவிகள் வந்து சென்றதாக கூறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக இவர்கள் கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதையடுத்து அந்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலி டாக்டர் தம்பதி கைது

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அன்பரசி புகார் செய்தார். அதன்பேரில் போலி டாக்டர்கள் கவிதா, பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:-

கருக்கலைப்பு செய்த கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணையை தொடங்கி உள்ளோம். இங்கு வந்தவர்கள் யார்? என்ற விவரம் அதன் மூலம் சேகரித்துள்ளோம். கருக்கலைப்பு மையத்துக்கு வந்து சென்றவர்களிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளோம்.

கைதான கவிதா, பிரபு ஆகியோரின் செல்போன் எண்களுக்கு வந்த அழைப்பு மற்றும் இவர்கள் தொடர்பு கொண்ட எண்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த எண்கள் யாருடையது, அதில் மற்ற மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள், டாக்டர்கள் எண்கள் ஏதும் உள்ளதா? என்று ஆய்வு செய்யப்படுகிறது. கல்லூரி மாணவிகள், திருமணம் ஆன பெண்கள் இங்கு கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவருகிறது. விரைவில் பலர் இதில் சிக்குவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.