தமிழக அணைகளில்4 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளதுகுடிநீர் வடிகால் வாரியம் தகவல்
மாநிலம் முழுவதும் அடுத்த 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவதற்கு தேவையான தண்ணீர் தமிழக அணைகளில் இருப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு
தமிழகத்தில் பருவமழை பொய்த்து உள்ளதால், ஏரிகளில் போதுமான தண்ணீர் இல்லை. எனவே மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் நிலத்தடி நீரும் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் தற்போது அதிகம் பேசப்படும் வார்த்தை ‘குடிநீர் தட்டுப்பாடு’ என்பது தான்.
ஆனால் மாநிலம் முழுவதும் சுமார் 4 மாதங்களுக்கு (120 நாட்கள்) தேவையான குடிநீர் வழங்குவதற்கு போதுமான நீர் தமிழக அணைகளில் இருப்பதாக மாநில குடிநீர் வடிகால் வாரியம் கூறியுள்ளது. இது தொடர்பாக வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் கூறியதாவது:-
மேட்டூர் அணை
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு மேட்டூர் அணை மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த பகுதிகளுக்கு தினசரி 1,016.07 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தினசரி ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
93 ஆயிரத்து 470 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 16 ஆயிரத்து 172 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் காவிரி மூலம் 120 நாட்களும், கொள்ளிடம் ஆறு மூலம் நூறு நாட்களுக்கும் குடிநீர் வினியோகிக்க முடியும்.
100 நாட்களுக்கு வினியோகம்
ஈரோடு மாவட்டத்தின் மற்றொரு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பவானிசாகர் அணையில் 5 ஆயிரத்து 274 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த பகுதிகளுக்கு தினசரி 122.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி 200 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 150 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க போதுமான தண்ணீர் உள்ளது.
கரூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை சமாளிக்கும் அமராவதி அணையில், 235 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த பகுதிகளுக்கு தினசரி 25.93 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த 100 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.
பாபநாசம், மணிமுத்தாறு
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு பகுதி மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையில் 645 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த பகுதிகளுக்கு தினசரி 58.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக தினசரி 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் அடுத்த 90 நாட்களுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கும் பாபநாசம் அணையில் 58 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. குடிநீருக்காக தினசரி 25 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதேபோல் மணிமுத்தாறு அணையில் 1,184 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. குடிநீருக்காக தினசரி 275 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும். இந்த பகுதிகளுக்கு தினசரி 300.20 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.
குழித்துறை ஆறு
குமரி மாவட்டத்துக்கு பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் பேச்சிப்பாறை அணையில் தற்போது 134 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இங்கிருந்து குடிநீருக்காக தினசரி 65 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதேபோன்று பெருஞ்சாணி அணையில் 185 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இப்பகுதிகளுக்கு தினசரி 41.78 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அடுத்த 120 நாட்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆறு மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த அணையில் 325 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்தப்பகுதிகளுக்கு தினசரி 20.58 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. தினசரி 42 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 90 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.
கோவை, திருப்பூர்
மேலும் கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி அணை மற்றும் பில்லூர் நீர்த்தேக்கத்தில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் சோலையாறு அணையில் 255 மில்லியன் கன அடியும், பரம்பிக்குளம் அணையில் 2 ஆயிரத்து 204 மில்லியன் கன அடியும், ஆழியாறு அணையில் 575 மி.க.அடியும், திருமூர்த்தி அணையில் 309 மி.க.அடியும், சிறுவாணியில் 22.04 மில்லியன் கன அடியும், பில்லூர் நீர்த்தேக்கத்தில் 1,182 மி.க.அடியும் தண்ணீர் உள்ளது.
பரம்பிக்குளத்தில் இருந்து 150 நாட்களுக்கும், சிறுவாணியில் இருந்து 90 நாட்களுக்கும், பில்லூர் நீர்தேக்கத்தில் இருந்து 170 நாட்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதைப்போல சாத்தனூர் அணையில் 825 கனஅடி தண்ணீர் உள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அடுத்த 120 நாட்களுக்கு குடிநீர் வினியோகிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.