மக்களை வாட்டி வதைத்து வந்தகத்திரி வெயில் விடைபெற்றது
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கும் முன்பே சூரியன் சுட்டெரிக்க தொடங்கியது. கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் தீவிரம் அடைந்தது. தகிக்கும் வெயிலால் தவித்த மக்களுக்கு ‘கோடை மழை’ என்பது கானல் நீராகவே போய்விட்டது. இந்தநிலையில் வெயில் காலத்தில் மிரட்டக்கூடிய ‘அக்னி நட்சத்திரம்’ எனும் ‘கத்திரி வெயில்’ காலம் கடந்து 5-ந்தேதி தொடங்கியது.
தொடங்கிய ஓரிரு நாளில் ஆக்ரோஷம் இல்லை என்றாலும், நாட்கள் செல்ல செல்ல கத்திரி வெயில் கோர முகத்தை காட்ட தொடங்கியதால், மக்கள் தவித்து வந்தனர். வெயிலுக்கு பயந்து மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். பகலில் வெளியே தலைகாட்டவே மக்கள் பயந்து போய் கிடந்தனர்.
இரட்டை சோகம்
கத்திரி வெயிலால் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. சாலையில் வீசும் அனல் காற்றினால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். சாலையோர பஸ் நிறுத்தங்களிலும், மரங்களின் நிழல்களிலும் இளைப்பாறி செல்வோர் எண்ணிக்கை அதிகமானது. கண்ணில் பட்ட சாலைகள் எல்லாம் கானல் நீராகவே காட்சி அளித்தது.
சாலையில் நடந்து செல்வோர் பெரும்பாலும் குடைகள் பயன்படுத்தி நடந்தனர். வாகனங்களில் செல்வோர் முகத்தை துணியால் மூடியபடி பறந்தனர். வீடுகளில் உள்ள மின்விசிறிகள், ஏ.சி.க்கள் இடைவிடாமல் இயங்கின. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சென்னைவாசிகளுக்கு, கத்திரி வெயில் இரட்டை சோகத்தை ஏற்படுத்தியது.
விடைபெற்றது
சென்னை, மதுரை, கோவை, கரூர், தர்மபுரி, நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, திருத்தணி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் தினந்தோறும் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிலும் குறிப்பாக திருத்தணியில் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்தது. அங்கு 110 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தி எடுத்தது.
கடந்த 24 நாட்களாக மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் நேற்றுடன் விடைபெற்றது. கத்திரி வெயில் விடைபெற்றாலும் ஓரிரு நாட்கள் வெயிலின் தாக்கம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் கத்திரி வெயில் காலம் விடைபெற்றது என்ற செய்தியே மக்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது.