4–வது வரிசையில் லோகேஷ் ராகுல் சதம் அடித்தது நம்பிக்கை அளிக்கிறது கேப்டன் விராட்கோலி கருத்து
‘உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் 4–வது வரிசையில் லோகேஷ் ராகுல் சதம் அடித்தது நம்பிக்கை அளிக்கிறது’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
இந்திய அணி வெற்றி
கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி லோகேஷ் ராகுல் (108 ரன்), டோனி (113 ரன்) ஆகியோரின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து ‘ஆல்–அவுட்’ ஆகி தோல்வியை தழுவியது.
4–வது வரிசையில் களம் கண்ட லோகேஷ் ராகுல் சதம் அடித்ததன் மூலம் இந்த உலக கோப்பை போட்டியில் அவர் தான் 4–வது வீரராக இறங்குவார் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
விராட்கோலி பேட்டி
போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:–
4–வது வரிசையில் களம் இறங்கிய லோகேஷ் ராகுல் ஆடிய விதம் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்து இருக்கிறது. அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் தங்களது பணி என்ன என்பதை அறிந்து இருப்பார்கள். லோகேஷ் ராகுல் ரன்கள் குவித்தது முக்கியமானதாகும். அவர் ஒரு தரமான வீரர். டோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் மிகவும் நன்றாக விளையாடினார்கள்.
முதலில் பேட்டிங் செய்ததால் 2 ஆட்டமும் சவாலாக இருந்தது. ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தரமான வீரர்கள். அவர்கள் பார்ம் குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஐ.சி.சி. போட்டியில் இருவரும் நட்சத்திர வீரர்கள். போகப்போக இருவரும் நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த ஆட்டத்தில் நாங்கள் சேசிங் செய்ய தான் விரும்பினோம். ஆனால் சவாலை சந்திக்கும் நோக்கில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தோம். பயிற்சி ஆட்டத்தில் உத்வேகம் பெற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு அதிகமான போட்டிகளில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். 2 ஆட்டங்களிலும் எங்களது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. வங்காளதேச பேட்ஸ்மேன்கள் சவால் அளிக்கும் வகையில் ஆடினார்கள். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஜஸ்பிரித் பும்ரா தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தினார். யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 2–வது பாதியில் பந்து சற்று சுழல வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதன் முதல் 15 ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்வது முக்கியமானதாகும். ‘டாஸ்’ ஜெயித்தால் பெரும்பாலான அணிகள் சேசிங் செய்வதையே விரும்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லோகேஷ் ராகுல் மகிழ்ச்சி
சதம் அடித்த லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில், ‘சில பிரச்சினைகளால் கிரிக்கெட் ஆடாமல் சில காலம் நான் ஒதுங்கி இருந்தது எனது இயல்பான ஆட்டத்தை புரிந்து கொள்ள உதவியது. மற்றபடி எனக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. அப்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டேன். மறுபடியும் களம் திரும்பி நான் ஆடி வரும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடினேன். அதே நம்பிக்கையுடன் இங்கு வந்து ரன் குவித்தது திருப்தி அளிக்கிறது’ என்று கூறினார்.