அமெரிக்க மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவின் 50 சதவீத வரி விதிப்பை ஏற்க முடியாது : டிரம்ப் திட்டவட்டம்
இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான இருதரப்பு உறவு நன்றாக உள்ளது. குறிப்பாக ராணுவ உறவு நன்றாக இருக்கிறது. ஆனால் வர்த்தக உறவு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.
குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிருப்தி அடைந்து இருக்கிறார்.
இதையொட்டி, சி.பி.எஸ். நியூஸ் டி.வி., வானொலி செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது:–
மோசமாக நடத்தப்படுவதற்கு நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இந்தியாவை நீங்கள் பாருங்கள். பிரதமர் நரேந்திர மோடி எனது நல்ல நண்பர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள்?
அமெரிக்க மோட்டார் சைக்கிள் மீது 100 சதவீத வரி விதிக்கிறார்கள். ஆனால் நாம் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை.
(அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியா 100 சதவீத வரி விதித்ததை டிரம்ப் இப்படி சுட்டிக்காட்டினார். இந்தியா, இந்த மோட்டார் சைக்கிளுக்கு வரி விதிக்கக்கூடாது என்பது டிரம்பின் எதிர்பார்ப்பு.)
நாம் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்புகிறபோது அவர்கள் 100 சதவீத வரி விதித்தனர். ஆனால் அவர்கள் ஏராளமாக மோட்டார் சைக்கிள்களை தயாரித்து இங்கே அனுப்புகிறார்கள். அவற்றின் மீது நாம் வரி போடுவதில்லை.
எனவே நான் பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து இதுபற்றி பேசினேன். இதை ஏற்க முடியாது என்று சொன்னேன். அந்த தொலைபேசி அழைப்பால் 50 சதவீத வரியை குறைப்பதாக மோடி கூறினார். ஆனால் இதையும் ஏற்க முடியாது, ஏனென்றால் நாம் அவர்களுக்கு வரி விதிப்பதில்லை என்பதை குறிப்பிட்டேன். இப்போதும் அதை ஏற்க முடியாது. அவர்கள் இதைப் பரிசீலித்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாரும் கொள்ளையடிக்க விரும்புகிற வங்கி போல அமெரிக்கா இருக்கிறது. இதைத்தான் அனைவரும் நீண்ட காலமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நாடுகளால் நமக்கு 800 பில்லியன் டாலர் (சுமார் ரூ.56 லட்சம் கோடி) வர்த்தக பற்றாக்குறை ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா வரி விதிப்பதில் மன்னனாக இருக்கிறது, அதிகபட்ச வரி விதிக்கிறது என்று டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.