பாகிஸ்தான் வழியாக பிரதமர் மோடி விமானம் பறக்கலாம் : இம்ரான்கான் அரசு ஒப்புதல்
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, நாளை (13–ந்தேதி) தொடங்குகிறது. நாளை மறுதினம் (14–ந்தேதி) முடிகிறது.
இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
இதற்காக பாகிஸ்தான் வழியாக செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.
ஆனால் கடந்த பிப்ரவரி 14–ந்தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தருகிற வகையில், இந்திய போர் விமானங்கள் பிப்ரவரி 26–ந்தேதி பாகிஸ்தான் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை லேசர் குண்டுகள் போட்டு துவம்சம் செய்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வான்வெளியை அந்த நாட்டின் இம்ரான்கான் அரசு மூடி வைத்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அரசின் சார்பில் இம்ரான்கான் அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதைப் பரிசீலித்த இம்ரான்கான் அரசு, மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இதை பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் நேற்று உறுதி செய்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்திய பிரதமரின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறப்பதற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கான நடைமுறைகள் முடிந்த உடன் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்படும்’’ என்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் செல்கிறார். ஆனால் அவரை பிரதமர் மோடி சந்திக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் 21–ந்தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டுக்கு பிஷ்கேக் செல்வதற்கு அப்போதைய இந்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜின் விமானம் பாகிஸ்தான் வழியாக பறக்க அந்த நாடு சிறப்பு அனுமதி வழங்கியது நினைவுகூரத்தக்கது.