இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா? – நியூசிலாந்துடன் இன்று மோதல்
இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், 15-வது நாளான இன்று (வியாழக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.
இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவையும், அடுத்த ஆட்டத்தில் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து தாக்கியதில் இடது கை பெருவிரலில் காயம் அடைந்தார். லேசான எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதால் அவர் இந்த ஆட்டம் மட்டுமின்றி அடுத்த சில லீக் ஆட்டங்களிலும் விளையாட முடியாது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தவான் இல்லாததால் தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுல், ரோகித் சர்மாவுடன் இணைந்து களம் இறங்குவார். லோகேஷ் ராகுல் ஆடிய 4-வது வரிசையில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவர் களம் இறங்கக்கூடும். இருப்பினும் விஜய் சங்கர் ஆல்-ரவுண்டர் என்பதால் அவருக்கு முன்னுரிமை அளிக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சூசகமாக தெரிவித்துள்ளார். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து இந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆடும் லெவன் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. அவர் சேர்க்கப்பட்டால் குல்தீப் யாதவுக்கு இடம் கிடைக்காது.
இந்திய கேப்டன் விராட் கோலி சாதனையின் விளிம்பில் இருக்கிறார். அவர் இந்த ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெறுவார். மொத்தத்தில் இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும், முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் அடுத்தடுத்து தோற்கடித்து புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு அபாரமாக இருக்கிறது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம் ஆகியோர் எதிரணியினருக்கு அச்சுறுத்தலாக விளங்கி வருகிறார்கள். அவர்களின் பந்து வீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, இந்தியாவை 179 ரன்னுக்கு சுருட்டி வெற்றி கண்டது. அந்த நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணி களம் காணும். இதுவரை தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் தங்களின் வெற்றிப்பயணத்தை தொடர வரிந்துகட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவு இருக்காது.
நாட்டிங்காமில் இந்த வாரம் முழுவதுமே பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆட்டம் குறைந்த ஓவர் கொண்டதாக மாற்றப்படலாம். இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. தூர்தர்ஷனிலும் பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா.
நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ அல்லது ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.