பெண் இயக்குனர் வேண்டாம்: அஜித் மறுப்பு தெரிவித்தது ஏன்?
அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
‘பிங்க்’ ரீமேக் படத்தை தன்னால் முழுமையாக ரீமேக் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் இருந்ததாகவும், அதனை நான் அஜித்திடம் கூறியபோது, நிதானமாக யோசித்து சொல்லுங்கள்’ என்று அவர் கூறினார். சில நாட்கள் கழித்து அவரை சந்தித்த நான், ‘இந்த படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று யோசனை தெரிவித்தேன். ஆனால் இது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். இந்த படத்தை ஒரு பெண் இயக்குனர் இயக்கினால் பெண்ணுக்கு பெண் பரிந்துரை செய்வதாக மக்கள் நினைத்து விடுவார்கள். ஒரு ஆண் இயக்குனர் இயக்கினால் தான் இந்த படத்தின் கருத்து மக்களை ரீச் ஆகும் என்று அஜித் தெளிவாக கூறினார். இந்த தெளிவுதான் என்னை இந்த படத்தை இயக்க தைரியம் கொடுத்தது’ என்று கூறினார்.
மேலும் ‘பெண்கள் குறித்த புரிதல் நம் சமூகத்தில் ரொம்ப பலவீனமாக இருப்பதாகவும், நானே பல படங்களில் ஒரு பெண்ணை விரட்டி விரட்டி காதலிக்கும் காட்சிகளில் நடித்துள்ளதாகவும், அதற்கு பிராயசித்தமாக இப்படி ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என்றும் அஜித் தன்னிடம் கூறியதாக எச்.வினோத் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் அஜித் இந்த படத்தில் தான் அவர் நடித்த படங்களிலேயே அதிக வசனம் பேசியிருப்பதாகவும், 50 படங்களில் பேசிய வசனத்தை இந்த ஒரு படத்தில் என்னை பேச வைத்து விட்டீர்கள் என்று அஜித் கூறியதாகவும் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.