ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி புறப்பட்டார்
கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
இந்தநிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பாகிஸ்தானுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 26ந்தேதி இந்திய போர் விமானங்கள் சென்று லேசர் குண்டு வீச்சு நடத்தியதை தொடர்ந்து, தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடி உள்ளது.
இதன் காரணமாக கிர்கிஸ்தானுக்கு பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அந்த நாட்டின் ஒப்புதல் கோரப்பட்டது. அதற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இன்று காலை பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பிஷ்கேக் புறப்பட்டு சென்றார். இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக வரலாறு, கலாசார உறவு இருந்து வருவதும், இந்திய கலாசாரத்தை அந்த நாட்டு மக்கள் பின்பற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டின் இடையே அவர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.