கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
பீகாரில் கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அவுரங்காபாத், கயா, நவாடா ஆகிய மாவட்டங்களில் கடும் அனல்காற்று வீசி வருகிறது. சனிக்கிழமை இரவு வரை 44 பேர் உயிரிழந்த நிலையில், ஞாயிறன்றும் வெப்பத்தின் கொடுமைக்கு பலியானோர் எண்ணிக்கையுடன் சேர்த்து இரு நாட்களில் 61-ஆக அதிகரித்துள்ளது. வெப்பத்தால் மயங்கிய பலர் வழியிலேயே இறந்துவிட, மேலும் பலர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.
மேலும் 14 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஏற்கனவே தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.