குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளும் வரலாறு காணாத வகையில் வறண்டு விட்டன. இதனால் சென்னை மாநகர பொதுமக்களுக்கு கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம், நெய்வேலி நீர்ப்படுகை, தாமரைப்பாக்கம் மற்றும் மீஞ்சூரில் உள்ள விவசாய கிணறுகள், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இருப்பினும் பெரும்பாலான வீடுகளில் போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்து லாரிகளில் தண்ணீர் பெற முடிவு செய்து பலர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கும் சரியான நேரத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை என்ற குறையும் பொதுமக்கள் மத்தியில் இருந்து வருகிறது. மாநகரில் உள்ள கோவில் தெப்பக்குளங்களும் வறண்டு விட்டன.
இதனால் சென்னை மாநகரில் இரவு பகல் என்று பார்க்காமல் வாகனங்களில் குடும்பத்துடன் குடங்கள், பிளாஸ்டிக் கேன்களை எடுத்து கொண்டு தண்ணீரை தேடி பொதுமக்கள் அலைவதை காணமுடிகிறது. பெரும்பாலும் மாநகரில் லாரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் நீரேற்று நிலையங்கள் உள்ள வள்ளுவர் கோட்டம், அண்ணாமலை நகர், கீழ்ப்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் குடிநீரை பிடித்து செல்கின்றனர்.
இதுபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நடத்தியுள்ளார்.
இந்நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது குறித்து ஆய்வு செய்யவும், மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.