‘தரக்குறைவான வார்த்தைகளால் வீரர்களை விமர்சிக்க வேண்டாம்’ முகமது அமிர், சோயிப் மாலிக் வேண்டுகோள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில்லை என்ற பரிதாபம் தொடருகிறது. இந்திய அணியிடம் பாகிஸ்தான் சந்தித்த தோல்வியை தொடர்ந்து அந்த அணி வீரர்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகிறார்கள். மேலும் முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் வீரர்கள் கடைசி வரை போராடவில்லை. மெத்தனமாக ஆடி பணிந்து விட்டனர் என்று விமர்சனம் செய்தனர். அத்துடன் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாளில் சோயிப் மாலிக், அவரது மனைவி சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் அங்குள்ள துரித உணவகத்தில் சாப்பிடும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவது போல் அமைந்துள்ளது. போட்டிக்கு முன்பு இப்படி ஊர் சுற்றி சாப்பிட்டால் எப்படி வெற்றியை பெற முடியும் என்று விமர்சித்துள்ளனர். சில ரசிகர்கள் வீரர்களை மட்டுமின்றி அவரது குடும்பத்தாரையும் மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர், ஆல்–ரவுண்டர் சோயிப் மாலிக் ஆகியோர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து முகமது அமிர் தனது டுவிட்டர் பதிவில் ‘தயவு செய்து வீரர்களை மோசமான வார்த்தைகளால் திட்டாதீர்கள். எங்களது ஆட்டதிறனை விமர்சிக்கலாம். நாங்கள் மோசமாக விளையாடி விட்டாலும் கடவுளின் அருளால் நல்ல நிலைக்கு திரும்புவோம். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை’ என்று குறிப்பிட்டுள்ளார். சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பதிவில், ‘எல்லா வீரர்களின் சார்பிலும் நான் மீடியாக்கள் மற்றும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். எங்கள் குடும்பத்திருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள். தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து விமர்சிக்காதீர்கள். அது சரியானதாக இருக்காது. இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக நாங்கள் ஓட்டலுக்கு செல்லவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.