ஹாங்காங்கில் 20 லட்சம் பேர் திரண்ட போராட்டத்துக்கு நடுவே ஆம்புலன்சுக்கு வழி – நெகிழ்ச்சி சம்பவம்
ஹாங்காங்கில் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முழுவதுமாக கைவிட வலியுறுத்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 20 லட்சம் பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் போராட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை பெரிய கட்டிடத்தின் மீது வைக்க சுவரில் ஏறியபோது, தவறி கீழே விழுந்தார்.
இதில் காயம் அடைந்தவரை அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. சுமார் 20 லட்சம் பேர் திரண்டு இருந்தாலும் நொடிப் பொழுதில் கடல் அலை விலகிக்கூடுவது போல் ஆம்புலன்சுக்கு வழிவிட்டனர். இது மனித நேயத்தை பறைசாற்றுவதாக அமைந்தது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றம் அருகே நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் மறுநாள் காலை ஒன்று கூடி தங்களால் போடப்பட்ட குப்பைகளை தாங்களே அகற்றியது குறிப்பிடத்தக்கது.