அமெரிக்க உளவுத்துறை தலைவர் திடீர் ராஜினாமா
அமெரிக்க உளவுத்துறை அமைப்பின் தலைமை அதிகாரியாக இருந்து வந்தவர் டான் கோட்ஸ். இவர் நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அந்த கடிதத்தில் அவர், “எனது 2½ ஆண்டு பதவிகாலத்தில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுவடைந்து இருக்கிறது. எனவே எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
டான் கோட்சின் ராஜினாமா கடிதத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். இது பற்றி அவர் டுவிட்டரில், “அடுத்த மாத (ஆகஸ்ட்) நடுப்பகுதியில் டான் கோட்ஸ் பதவி விலகுவார். அதன் பின்னர் அந்த பதவிக்கு டெக்சாஸ் மாகாண எம்.பி. ஜான் ராட்கிளிப் பரிந்துரை செய்யப்படுவார்” என தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப், தன்னை இந்த பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டதாக டான் கோட்ஸ் கடந்த பிப்ரவரி மாதம் கூறினார். இருப்பினும் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக இருவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.