உன்னா கற்பழிப்பு சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் படுகாயம்; 2 உறவினர்கள் பலி – எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவை சேர்ந்த ஒரு 17 வயது இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இல்லம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை குல்தீப்சிங் செங்கார் என்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. கற்பழித்து விட்டதாக அப்பெண்ணின் தாயார் பரபரப்பு புகார் தெரிவித்தார்.
அதனால், உன்னா கற்பழிப்பு சம்பவம் என்று இது பிரபலம் அடைந்தது. குல்தீப்சிங் செங்கார், கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் ஜெயிலில் இருக்கிறார்.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமா, ஒரு வழக்கில் கைதாகி ரேபரேலி ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக, அந்த பெண், அவருடைய உறவுக்கார பெண்கள் 2 பேர், வக்கீல் ஆகியோர் ஒரு காரில் நேற்று முன்தினம் அங்கு புறப்பட்டனர். வழியில், ஒரு சரக்கு லாரி, அந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த பெண்ணும், வக்கீலும் படுகாயம் அடைந்து, லக்னோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 2 உறவுக்கார பெண்களும் பலியானார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரரும், 2 பெண் போலீசாரும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளித்து வந்தனர். ஆனால், சம்பவத்தின்போது அவர்கள் உடன் செல்லவில்லை. இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், சரக்கு லாரியின் நம்பர் பிளேட், பெயிண்ட் பூசி கருப்பாக ஆக்கப்பட்டு இருப்பதை கண்டனர். இருப்பினும், அவர்கள் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். பதேபூர் மாவட்டத்தில், அது பதிவு செய்யப்பட்டுள்ளது. லாரி டிரைவர், கிளனர், உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் செல்போன் அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம், ஒரு விபத்துதான், பாரபட்சமின்றி விசாரணை நடந்து வருவதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. ஓ.பி.சிங் கூறினார். பெண்ணின் தாயாரோ, இதர உறவினர்களோ கேட்டுக்கொண்டால், சி.பி.ஐ. விசாரணைக்கு சிபாரிசு செய்ய உ.பி. அரசு தயார் என்றும் அவர் தெரிவித்தார். காரில் இடம் இல்லாததால்தான், பாதுகாவலர்கள் உடன் செல்லவில்லை என்றும் அவர் கூறினார்.
ஆனால், “இது விபத்து அல்ல, என் குடும்பத்தை கூண்டோடு அழிக்க நடந்த சதி. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் மகனும், அவனுடைய கூட்டாளியும் எங்களை தொடர்ந்து மிரட்டி வந்தனர்” என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் குற்றம் சாட்டினார்.
சம்பவம் குறித்து சி.பி.ஐ. யிடம் மாநில அரசு தெரிவித்தது. அதன் அடிப்படையில், சி.பி.ஐ. குழு, அந்த பெண் அனுமதிக்கப்பட்ட ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று பார்த்தது. அவருடைய குடும்பத்தினரிடம், சம்பவம் குறித்து கேட்டறிந்தது. டி.ஜி.பி. ஓ.பி.சிங்கும் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
பெண்ணின் சிகிச்சை செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக அந்த பெண்ணின் மாமா மகேஷ் சிங் அளித்த புகாரின்பேரில், குல்தீப்சிங் செங்கார் எம்.எல்.ஏ. உள்பட 10 பேர் மீது ரேபரேலி போலீசார், கொலை, கொலை முயற்சி மற்றும் குற்றச்சதி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். பெயர் குறிப்பிடப்படாத 20 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று எதிர்க்கட்சிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின்போது, சமாஜ்வாடி உறுப்பினர் ராம் கோபால் யாதவ் இப்பிரச்சினையை எழுப்பினார். பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்ல முயற்சி நடந்ததாக அவர் கூறினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் எழுந்து அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
அப்போது, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை மந்திரி இதுதொடர்பாக விளக்கம் அளிப்பார் என்று சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அதை கேட்காமல் உறுப்பினர்கள் கூச்சலிட்டதால், சபையை பகல் 12 மணிவரை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய பெண்களுக்கு ஒரு சிறப்பு செய்தி. உங்களை கற்பழித்ததாக ஒரு பா.ஜனதா எம்.எல்.ஏ. குற்றம் சாட்டப்பட்டால், எந்த கேள்வியும் கேட்காதீர்கள்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “பாதிக்கப்பட்ட பெண் சம்பந்தப்பட்ட விபத்து, அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வழக்கில் சி.பி.ஐ. விசாரணையில் முன்னேற்றம் ஏதும் உள்ளதா? குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வை, ஏன் இன்னும் பா.ஜனதாவில் நீடிக்க விட்டுள்ளனர்? அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மெத்தனம் காட்டப்பட்டது ஏன்?
இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்வரை, பா.ஜனதா அரசிடம் இருந்து நீதி கிடைக்கும் என்று யாராவது எதிர்பார்க்க முடியுமா?” என்று கூறியுள்ளார்.
பெண்ணை கொல்ல முயற்சி நடந்ததாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டார்.
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, “பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணை கொல்ல திட்டமிட்ட சதி நடந்துள்ளதாகவும், சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கும் செயல் என்றும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இச்சம்பவம், பெண்கள் தொடர்பான பா.ஜனதா கொள்கைகளின் உண்மைத்தன்மையை தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.
நேர்மையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதி உள்ளார். டெல்லி பெண்கள் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், ஆஸ்பத்திரிக்கு சென்று அந்த பெண்ணை பார்த்தார். தரமான சிகிச்சைக்காக டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.