அணியின் நலனே முக்கியம்:‘நான் சுயநலவாதி கிடையாது’இந்திய வீரர் ரஹானே பேட்டி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே 81 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளாக சதம் ஏதும் அடிக்காத நிலையில் 10-வது சதத்தை நெருங்கி வந்து நழுவ விட்டார். பின்னர் 31 வயதான ரஹானே நிருபர்களிடம் கூறியதாவது:-
சதத்தை நழுவ விட்டது குறித்து தான் கேள்வி கேட்பீர்கள் என்பதை அறிவேன். அதற்கு பதில் அளிக்க தயாராக வந்தேன். களத்தில் நிற்கும் வரை, எனது நினைப்பு எல்லாம் அணியின் நலன் குறித்து மட்டுமே இருக்கும். தனிநபர் சாதனைக்காக ஆடும் சுயநலவாதி நான் கிடையாது. அதனால் சதம் குறித்து அதிகமாக கவலைப்படவில்லை. நெருக்கடியான சூழலில் அதுவும் இத்தகைய ஆடுகளத்தில் 81 ரன்கள் எடுத்து அணியை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வந்துள்ளேன். நாம் அணிக்கு அளிக்கும் பங்களிப்பே முக்கியமானது.
உலக கோப்பை கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காது என்பதை அறிந்ததும் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்தேன். அந்த 2 மாத காலங்களில் 7 கவுண்டி போட்டிகளில் ஆடினேன். எனது பேட்டிங்கிலும், குறிப்பிட்ட சில பகுதிகளிலும் கவனம் செலுத்தினேன். அதுவும் 3-வது பேட்டிங் வரிசையில் புதிய பந்தில் விளையாட வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டமாகும். இந்த 2 மாதங்களையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டேன்.
அஸ்வின் நீக்கம் ஏன்?
இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நீக்கப்பட்டது குறித்து கேட்கிறீர்கள். அஸ்வின் போன்ற வீரரை தவற விடுவது கடினமானது தான். ஆனால் அணி நிர்வாகம் எப்போதும், எது சரியான அணிச்சேர்க்கையாக (ஆடும் லெவன் அணி) இருக்கும் என்பது குறித்து தான் சிந்திக்கிறது.
இந்த ஆடுகளத்தன்மையில் சிறப்பாக பந்து வீசுவதற்கு ரவீந்திர ஜடேஜா பொருத்தமானவராக இருப்பார் என்று கருதி அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவை தேர்வு செய்திருக்கிறார்கள்.
இவ்வாறு ரஹானே கூறினார்.