பொருளாதார சரிவில் இருந்து மீள மத்திய அரசு அதிரடி நடவடிக்கை – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்காக மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மோட்டார் வாகனத்துறைக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டுக்கடன், வாகனக்கடன் வட்டி குறையும்.
இந்தியா, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெருமளவில் வேலை வாய்ப்பினை வழங்கி வந்த மோட்டார் வாகன தொழில் துறை, கட்டுமான தொழில்துறை போன்றவை வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
இன்னொரு பக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த நிதித்துறை சிக்கலில் உள்ளது; இப்போது இருப்பது போன்ற பணப்புழக்க பற்றாக்குறையை சந்தித்தது கிடையாது என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இதன் அடிப்படையில் மத்திய அரசை எதிர்க்கட்சியினர் சாடி வருகின்றனர்.
இந்த நிலையில், பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்பதற்கு உதவுகிற அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கிறது. இது தொடர்பாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டு, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொருளாதார சீர்திருத்தம் என்பது மத்திய அரசின் தொடர் நடவடிக்கை ஆகும். இது எங்கள் செயல்திட்டத்தில் முதல் இடத்தில் உள்ளது.
உலகளாவிய மொத்த உள்நாட்டு வளர்ச்சிவிகிதம் தற்போதைய மதிப்பீடான 3.2 சதவீதம் என்பதில் இருந்து மேலும் குறைத்து மறுமதிப்பீடு செய்யப்படலாம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளை விட அதிகமாக இருக்கிறது.
உலகளாவிய மற்றும் முன்னணி நாடுகளின் பொருளாதார சராசரி நிலையை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.
அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தக போரின் காரணமாகவும், பண மதிப்பு குறைவாலும், உலகளாவிய வர்த்தகத்தில் மிகவும் நிலையற்ற தன்மை உள்ளது.
பொருளாதாரத்தை உருவாக்குகிறவர்களை மதிக்கிறோம். அவர்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் மத்திய பட்ஜெட் அமைந்தது. பொருளாதாரத்தை உருவாக்கும் பல்வேறு துறையினரின் தேவைகள் என்ன என்று அறிவதற்காக அவர்களுடன் ஆலோசனைகள் நடத்தி உள்ளேன்.
நாங்கள் சீர்திருத்த வேகத்தை இழந்து விடவில்லை.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கோரிக்கையை ஏற்று, பட்ஜெட்டில் அவர்களுக்கு உயர்த்தப்பட்ட கூடுதல் வரி (சர்சார்ஜ்) திரும்பப்பெறப்பட்டுள்ளது. பங்குகளை மாற்றுவதின் மூலம் வருகிற நீண்ட, குறுகிய கால மூலதன ஆதாயங்களுக்கான கூடுதல் வரி திரும்பப்பெறப்பட்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய நிலை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
மூலதன சந்தையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக இதைச் செய்துள்ளோம்.
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், அவர்களது முதலீட்டாளர்கள் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஏஞ்சல் வரி விதிகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் பிரச்சினைகளை கவனித்து தீர்வு காண்பதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உறுப்பினர் தலைமையில் ஒரு சிறப்பு பிரிவு உருவாக்கப்படும்.
பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு விதிகள் (சி.எஸ்.ஆர்.) இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது. அது சிவில் பொறுப்பாக கருதப்படும்.
வரி செலுத்துவோர் தொல்லைக்கு ஆளாவதாக ஒரு கருத்து நிலவுகிறது.
எனவே அக்டோபர் 1-ந்தேதி முதல் நோட்டீஸ்கள், சம்மன்கள், வருமான வரித்துறையின் உத்தரவுகள் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட கணினி அமைப்பின்மூலம் வழங்கப்படும். அது கணினி உருவாக்குகிற தனித்துவ எண்ணையும் கொண்டிருக்கும்.
வருமான வரித்துறை நோட்டீஸ்களுக்கு, வரி செலுத்துவோரிடம் இருந்து பதில் பெற்ற 3 மாதங்களுக்குள் தீர்வு காணப்படும்.
கம்பெனிகள் மீது வழக்குகள் தொடர்வதை விட அபராதம் விதிப்பதில் அரசு விருப்பம் கொண்டுள்ளது. கம்பெனி சட்டத்தின் படியான 14 ஆயிரம் வழக்குகளை நாங்கள் திரும்பப்பெற்றுள்ளோம்.
வங்கிகள் ரெப்போ ரேட் விகிதம் (ரெப்போ ரேட் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தருகிற கடன்களுக்கான வட்டி விகிதம்) மற்றும் வெளிப்புற அளவுகோல்கள் வாடிக்கையாளர்களுக்கான கடன்களில் எதிரொலிக்க வகை செய்யப்படும். இதன் மூலம் வீட்டுக்கடன், வாகனக்கடன், சில்லரைக்கடன் வட்டி விகிதம் குறையும். தொழில் துறையினருக்கான மூலதனக்கடன்கள் வட்டியும் குறையும்.
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கவும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மூலதனம் வழங்கப்படும்.
இந்த நடவடிக்கை, மேலும் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதி அமைப்பில் கடன்கள் வழங்குதலையும், பணப்புழக்கத்தையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
சிறுவணிகர்களுக்கு திரும்பத்தரவேண்டிய சரக்கு, சேவை வரி 30 நாளில் திரும்பத்தரப்படும்.
பழைய வாகனங்களை மாற்றுவதற்கு புதிய வாகனங்கள் வாங்க அரசு துறைகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் வாங்குகிற பி.எஸ்-4 ரக வாகனங்கள், அவை பதிவு செய்யப்படுகிற ஒட்டுமொத்த காலத்திற்கும் இயங்க அனுமதிக்கப்படும்.
மின்சார வாகனங்கள், எரி பொருள் பயன்படுத்துகிற வாகனங்கள் என இரு வகை வாகனங்களும் தொடர்ந்து பதிவு செய்யப்படும்.
பழைய வாகனங்களை ஒழித்துக்கட்டுவது தொடர்பாக அரசு ஒரு கொள்கையை வகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.