முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாசக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் கடந்த 9-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லை.
இதற்கிடையே திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செவ்வாய்கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவற்றின் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்தார்.
அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்ததலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் பலர் சென்று மருத்துவமனையில் விசாரித்து வந்தனர்.
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, ஜிதேந்திர சிங், ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, ஜோதிர்ஆதித்யா சிந்தியா,ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பலர் வந்து உடல்நலன் குறித்து விசாரித்து சென்றனர்.
கடந்த திங்கட்கிழமை உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உ.பி. கவர்னர் அனந்திபென் படேல், பிகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, டெல்லி ஆளுநர் அனில் பைஜால், மேனகா காந்தி ஆகியோர் நேரில் சென்று ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
கடந்த 10-ம் தேதியில் இருந்து ஜெட்லியின் உடல்நலன் குறித்து எய்ம்ஸ் நிர்வாகம் எந்தவிதமான அறிக்கையும் ஊடகங்களுக்கு அளிக்கவில்லை. இருப்பினும் ஜெட்லியின் உடல்நிலையை, பல்வேறு பிரிவுகள் கொண்ட சிறப்பு மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில்,ஜெட்லியின் உடல்நிலை நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன இந்த நிலையில் அவர் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது.